பாண்டி நாட்டில் இதுகாறும் கிடைத்தவற்றுள் இதுவே பழமையானது
தென்காசி மாவட்டம் திருமலாபுரம் குடைவரைக்கோயிலில் உள்ள சதுர நடனமாடும் சிவன் 7 - 8 ம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் கலைப்பாணி ஆகும். பாண்டி நாட்டில் இதுகாறும் கிடைத்தவற்றுள் இதுவே பழமையானது. திருப்பரங்குன்றம் குடைவரைக் கோயிலில் சதுரநடனமாடும் மற்றொரு சிற்பத்தைக் காணலாம். இது 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தது. இருகால்களைப் பின்னி நடனமாடும் சிற்பங்களைக் குன்றக்குடி, செவல்பட்டி ஆகிய இடங்களில் காணலாம். குன்றக்குடி சிற்பம் எண்தோள்களில் ஆயுதம் ஏந்தி ஆடுகிறது. செவல்பட்டிச் சிற்பம் முன் இடதுகையால் அபயம் காட்டி வலது கையை வீசியாடுகிறது. இது ஜடாபாரம் போன்ற தலையமைப்பைக் கொண்டு நாட்டிய மூர்த்தியாக விளங்குகிறது. பாண்டி நாட்டில் 9 ஆம் நூற்றாண்டு முதல் தான் ஆடும் கூத்தனின் படிமங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பழனி, இராமேசுவரம், குற்றாலம், சுந்தரபாண்டியன்பட்டினம், பொருப்புமேட்டுப் பட்டி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளவை வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. ஆதாரம் : ஆவணம் இதழ் - 15 புகைப்படம் : சரவண மணியன்