முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

பாண்டிய சக்கரவர்த்தி,
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மாமன்னர்களில் ஒருவர் ஆவார். இவர் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின் முடிசூடிக்கொண்டார்.

 மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன், எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான், பெருமாள் போன்ற பட்டப் பெயர்களை தரித்தவன். இவரது காலத்தில் பாண்டிய நாட்டில் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார் என்று கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவர் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆற்றிய போர்கள் :

சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மீது படையெடுத்து வெற்றி கொண்டார்.

மூன்றாம் இராசராசன் மகனான மூன்றாம் இராசேந்திரனையும் வென்று திறை செலுத்துமாறு ஆணையிட்டார்.

போசளர் கண்ணனூரினைத் (சமயபுரம்) தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம். இவர் போசள மன்னனான வீரகோமேச்சுரன் என்பவனை தோற்கச்செய்து தண்ட நாயகன் சிங்கணனை கொன்று கண்ணனூரினை மீட்டார்.

கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் சேமன் என்பவனைக் கொன்றான். இவருக்கு களிறுகளினைத் திரையாகக் கொடுத்தான் சோழ நாட்டின் ஒரு பகுதியினை ஆண்ட வீர ராமநாதன்.

இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று இலங்கையரசன் ஒருவனிடம் யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திரையாகப் பெற்றார்.

பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினார். பல்லவ மன்னனின் யானை, குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் எடுத்துக்கொண்டு, சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினை கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.

சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின் மேற்குப் பகுதியான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி ஆத்தூர் அருகில் உள்ள அகழியூர - அறகழூரினைத் தலைநகராக்கிப் பின் கொங்கு நாட்டினையும் கைப்பற்றி ஆட்சி புரிந்தார் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தார். வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றார். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டார். 
  
ஆற்றிய கோயில் அறப்பணிகள் : 
  
சிதம்பரத்தில் தில்லையம்பதியில் உள்ள திருமால், சிவன் கோயில்களிற்குத் துலாபார தானங்களை வழங்கினார். தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து, அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் சுந்தரபாண்டியன் கோபுரம் எனப் பெயர் பெற்றது.

திருச்சியில் உள்ள திருவரங்கம் என அழைக்கப்படும். திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் திருவரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தில் பொன் வேய்ந்து அக்கோயிலிலேயே முடிசூடியும் கொண்டார். கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தார். இக்கோயிலில் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவரது பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர் செய்த பணிகள் காரணமாக "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான். இவரது படிமங்கள் பல பட்டப்பெயருடன் திருவரங்கத்திலும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன. திங்கள் தோறும் தனது பிறந்தநாளான மூல நட்சத்திர நாளில் விழா நடத்த ஏற்பாடு செய்யச்சொல்வானெனவும் சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்கா திருக்கோயிலில், "சேரனை வென்றான்" என்ற பெயருடைய திருவிழாவொன்றை நடத்தி வைத்து மூன்று ஊர்களை நிவந்தமாக்கினார்.

தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் காஞ்சீபுர வராதீசுவரன், காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றார். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தார் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

 கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தார். காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் இவரைப் பற்றிய வாழ்த்துப்பா உள்ளது.

 அப்பாடலில்...

“வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி

வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்

வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்

வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே"

என இவரைப் பாடப்பட்டுள்ளது. தமிழ்பற்றும், வட மொழி அறிவும் உடைய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனது கல்வெட்டுக்கள் தமிழகம் முழுவதினிலும் காணலாம்.

பாண்டிய சக்கரவர்த்தி:-

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காசு.
(எல்லாந்தலையன்)
காலம்: கி.பி. 1251 - 1271.

முன்: நிற்கும் மனித உருவம்.

பின்: எல்லாந்(த)லை என்று தமிழில் மூன்று வரிகளில் உள்ளது.

உலோகம்: செம்பு
வடிவம்: வட்டம்
எடை: 3.63 கி

Pandyan Emperor:-

Satayavarman Sundarapandian I.
(Ellantalaiyan)
Period: A.D. 1251 - 1271.

Obverse : Standing human figure.

Reverse :  Three lines in Tamil Ellan(th)lai

Metal: Copper
Shape: Circle
Weight: 3.63 g

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.