பராக்கிரம பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது

பெரியபட்டினம் :

கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்களில் இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம் பெரியபட்டினம் மிக முக்கியமான துறைமுகம் ஆகும். மார்கோ போலோ, இபின் பாதுஷா போன்றவர்கள் ஃபக்தன் அல்லது பத்தன் எனக் குறிப்பிட்டது இவ்வூரையேயாகும். 

பாண்டிய மன்னர்கள் பெயரால் 10 ஆம் நூற்றாண்டில் பராக்கிரம பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. 12 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் பவித்திர மாணிக்கப்பட்டினம் எனச் சிறப்புப் பெயர் பெற்றுள்ளது. 14 ஆம் நூற்றாண்டு சீன நூல் ஒன்றில் (Tai-i-chih-luch) 'தா பத்தன் ' எனக் குறிக்கப்பட்டுள்ளது தா என்றால் பெரிய என்று பொருள். தாபத்தன் - பெரியபட்டினம் ஆகும். அமிர்குஸ்ரூ பரிஷ்கா போன்ற ஆசிரியர்களும் பெரியபட்டினத்தை பத்தன் பத்னி எனவும் அழைத்தனர்.

மகாவம்சத்தில் :

பாண்டியர் உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கைப் படைத் தலைவன் தண்டநாயகன் 1170 ல் தமிழ் நாட்டின் மீது படை கொண்டு வந்தான். குலசேகர பாண்டியனுக்கு எதிராகப் பராக்கிரம பாண்டியனுக்கு ஆதரவாக இராமேசுவரம் தீவைக் கைப்பற்றி எதிர்க்கரையில் இறங்கியபோது பெரியபட்டினம் நகர் கண்ட வருணனை இலங்கை மகா வம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. 

பராக்கிரம பட்டினம் மூன்று சுற்றுக் கோட்டை மதில்களையும், பன்னிரண்டு வாயில்களையும் உடையது என்று கூறப் படுகிறது. பெருநகரான அப்பட்டினத்தைக் கைப்பற்றிப் பலப் படுத்தியதாக கூறப்படுகிறது.

1293 ல் சீனத்திலிருந்து இலங்கை வழியாகத் தமிழகம் வந்த உலகப் பயணி மார்க்கோ போலோயும் இபின் பாதுஷாவும் பெரியபட்டினக் கரையில் தான் தரை இறங்கினர்.

திருப்புல்லாணிக் கல்வெட்டில்

இராமநாதபுரத்திற்கு அண்மையில் உள்ள திருப்புல்லாணிக் கல்வெட்டு ஒன்று பவித்திரமாணிக்கப்பட்டினம் எங்குள்ளது என்பதை விளக்குகிறது. 1251 முதல் 1271 வரை மதுரையை ஆட்சிபுரிந்த சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் உள்ள பவித்திர மாணிக்கப் பட்டினத்தில்   சோகைச் சாமந்தப் பள்ளிக்கு இறையிலியாக மருதூர், ஆம்புத்தூர் ஆகிய ஊர்களை வழங்கினான், 'கீழ்ச்செம்பிதாட்டு பவித்திர மாணிக்கப்பட்டினக் கீழ்ப்பால்' என்று குறிக்கப்படுகிறது திருப்புல்லாணி கீழ்ச்செம்பி நாட்டில் உள்ளது. பெரியபட்டினம் திருப்புல்லாணிக் கோயிலில் இருந்து நான்கு மைல் தொலையில் கிழக்கே அமைந்திருப்பதும் இன்றைய பெரியபட்டினமும், பவித்திரமாணிக்கப் பட்டினமும் ஒன்றே என்பதை உறுதிப்படுத்துகிறது.

வெளிநாட்டார் குறிப்புகளில் :

மன்னார் வளைகுடாவில் பெரியபட்டினம் பகுதியில் முத்துக் குளிப்பதைப் பற்றி மார்க்கோ போலோ விரிவாக எழுதியுள்ளார். முத்துக் குளிக்கச் செல்லும் படகுகள் 'பத்தலாறு' என்ற இடத்தில் ஒன்று கூடுகின்றன. அந்தப் பத்தலாற்றைப் பெரியபட்டினம் அருகே உள்ள 'கப்பலாறு' என்று ஆய்வாளர் எஸ். எம். கமால் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்.

இராமேசுவரம் திருப்புல்லாணி போன்று, பெரியபட்டினம் அருகேயுள்ள கோயில்கட்கு முத்துக் குளித்தலில் ஒரு பங்கு கொடையாகக் கொடுக்க வேண்டும் என்று செப்பேடுகள் கூறுகின்றன. உள்ளிக்கோட்டையில் ஏற்றுமதியாகும் பொருள்களில் இராமேசுவரம் பகுதி நன்முத்துக்கள் இடம் பெற்றிருந்த பெரிய பட்டினத்தின் ஒரு பகுதிக்கு முத்துப்பேட்டை என்றே பெயர். இவ்வூர் இன்றும் உள்ளது.

பெரிய பட்டினத்தில் அரேபியக் குதிரைகள் வந்து இறங்கியுள்ளன. அவைகளைக் கண்காணிக்கக் குழு ஒன்றும் இயங்கியது. இபின் பாதுக்ஷா 1344‌ ஆம் ஆண்டு பத்தனில் மூன்று மாதங்கள் மதுரை சன்தானின் விருந்தாளியாகத் தங்கியிருந்தார் பெரியபட்டினத்தை அழகிய பெரிய நகரம் என்றும், சிறந்த துறைமுகம் என்றும், மரத்தால் செய்யப்பட்ட அரங்கமும் மூடுவழியும் இருந்ததென்றும், போர் வீரர்கள் காத்திருந்தனர் என்றும் ஏமன் நாட்டுக்குச் செல்ல எட்டுக் கப்பல்கள் நின்றன என்றும் இபின் பாதுஷா கூறியுள்ளார்.

இங்கு கல்லால் கட்டப்பட்ட தொழுகைப் பள்ளியைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். அத்தொழுகைப் பள்ளி இன்றும் உள்ளது.

அகழாய்வு :

வரலாற்றுச் சிறப்புமிக்க, உலகப் பயணிகள் உயர்வாகத் குறித்த பெரியபட்டினத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறையினர் அகழாய்வு நடத்தினர் அங்குள்ள நத்தமேடு, களிமண்குண்டு ஆகிய மேட்டுப்பகுதிகள் கண்டறியப்பட்டன. அவை முறையே 25, 40 ஏக்கர் பரப்பளவு உள்ளவை இவ்விரு பகுதிகளும் பெரியபட்டினத்திற்கு மேல் எல்லையில் உள்ளன.

இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் சீனநாட்டு உயர் ரகப் பீங்கான் துண்டுகள் ( Celadon Ware ) மிக அதிகமாகக் கிடைத்தன. மதுரைப் பாண்டியர், சுல்தான், சோழர் காசுகளுடன் சீனக் காசும் கிடைத்துள்ளது. இது வட்டக் காசில் நடுவே சதுரமான துவாரம் உள்ள காசாகும். சீனப் பொருட்கள் சி.பி. 9 ஆம் நூற்றாண்டிற்கும் 14 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டவை.

உறை கிணறுகள் சில கண்டறியப்பட்டன. இங்குள்ள மூன்று தூண்களைக் கோட்டை வாசல் என அழைக்கின்றனர். இங்கு கிடைத்த சீனப் பீங்கான்கள் தென் கிழக்காசிய நாடுகளிலும், இலங்கையிலும், கிழக்கு ஆப்பிரிக்கக் கரைப் பகுதிகளிலும் கிடைத்துள்ளன.

சோழர்களுக்கும் சீன நாட்டுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. சீனாவில் தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பாண்டியர் சார்பில் தூதுவர்கள் சீனம் சென்றுள்ளனர். கிழக்கு மேற்கு நாடுகளின் கடல்வழிப் பயணத்தில் பெரிய பட்டினம் மிகவும் முக்கியமான நகராக விளங்கியுள்ளது என்பதில் ஐயமில்லை.

ஜப்பான் பேராசிரியர் நோபுரு கராஷிமா அவர்கள் 1987 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பெரியபட்டினம் அகழாய்வு குறித்துச் சிறப்புரை ஒன்றை நிகழ்த்தினார்.

தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறை பெரியபட்டினத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது நோபுரு கராஷிமா, யோஜி ஓயாகி ஈஜி நிட்டா போன்ற ஜப்பான் நாட்டுப் பேராசிரியர்களும், சென்னைப் பேராசிரியர் டாக்டர் கே. வி. இராமன் அவர்களும் வருகை புரிந்து ஆலோசனை வழங்கினர். டாக்டர் ஒய். சுப்புராயலு, டாக்டர் கே. ராஜன் ஆகியோர் நாகப்பட்டினம் வரை கிழக்குக் கடற்கரையில் பல பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டனர்.

ஆதாரம் : கல்வெட்டு இதழ் 49 | செ. இராசு தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.