கிராமமாக மாறிய தலைநகர் பழையாறை
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழையாறை. இப்போது, சிற்றூராக உள்ள பழையாறை பல்லவர் காலம் முதல் பிற்காலச் சோழர் காலம் வரை புகழ்பெற்ற பெருநகரமாகத் திகழ்ந்தது.
அரசிலாற்றுக்கும், முடிகொண்டானாறுக்கும் இடையே 5 மைல் நீளமும், மூன்று மைல் அகலமும் கொண்ட பரந்த நகரமாக இருந்த இந்நகரம் ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு, நந்திபுரம் என பல பெயர்களைப் பெற்றிருந்தது.
பல்லவர் ஆட்சி தமிழ்நாடெங்கும் பரவியபோது, பல்லவ நாட்டின் தென் பகுதிக்கு இந்த ஊர் தலைநகரமாகவும் இருந்தது. பின்னர், விஜயாலயன் காலம் முதல் மூன்றாம் இராஜராஜன் காலம் வரை சோழ மன்னர்களின் வாழ்விடமாக இருந்த இப்பெருநகரம், அவர்களுடைய இரண்டாவது தலைநகரம் என்ற புகழும் பெற்றது.
முதலாம் இராஜராஜன் காலம் வரை பழையாறை என்றும், முதலாம் இராஜேந்திரன் காலத்தில் முடிகொண்ட சோழபுரம் எனவும், இரண்டாம் இராஜராஜன் காலத்தில் பழையாறையின் ஒரு பகுதி இராசராசபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
ஏறத்தாழ 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த நகரம், சோழப் பேரரசுகளின் ஆட்சிக் காலமான 430 ஆண்டுகள் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது.
சோழப் பேரரசின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்ற இராஜராஜ சோழனும், இராஜேந்திரன் சோழனும் வளர்ந்தது இந்நகரில்தான். இராஜராஜ சோழனை வீரமும், விவேகமும் உள்ளவனாக வளர்த்து, ஈடு இணையற்ற வெற்றிகளையும், பெரும் புகழையும் பெற வைத்ததில் செம்பியன் மாதேவி, குந்தவை நாச்சியாருக்கு பெரும் பங்குண்டு. இந்தப் பழையாறையில் இருந்த அரண்மனையில்தான் இருவரும் விரும்பி வாழ்ந்தது மட்டுமல்லாமல், பல அரசாணைகளையும் பிறப்பித்தனர். இப்போது அந்த அரண்மனை மண்ணுக்குள் புதைந்துகிடக்கிறது.
இப்பெருமை வாய்ந்த பழையாறைப் பெருநகரம் இப்போது பழையாறு, பட்டீச்சரம், திருச்சத்திமுற்றம், அரிச்சந்திரபுரம், பாற்குளம், முழையூர், சோழன் மாளிகை, தாராசுரம், திருமத்தடி, கோணப்பெருமான்கோவில், ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், நாதன்கோவில், உடையாளூர், இராஜேந்திரன்பேட்டை எனப் பல கிராமங்களாகச் சிதறிக் கிடக்கின்றன. எனவே, சோழர் காலத்தில் தலைநகரமாகத் திகழ்ந்த இந்த ஊர் இப்போது கிராமமாக மாறியுள்ளது. குறிப்பாக, பழையாறை குக்கிராமமாக இருக்கிறது.
பட்டீச்சரம் அருகேயுள்ள சோழன் மாளிகையில்தான் சோழர்களின் மாளிகைக் கட்டப்பட்டது. இந்த மாளிகை இருந்த தடம் தெரியாமல் மண்ணோடு மண்ணாகிவிட்டது.
இந்த ஊரில் உள்ள நந்தன்மேடு, சோழன் மாளிகைப் பகுதிகளில் பெருங்கற்கால ஈமத் தாழிகளையும் செங்கற் கட்டடப் பகுதிகளையும் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை 1964 - 65 ஆம் ஆண்டுகளில் கண்டுபிடித்தது. இக்கள ஆய்வுகளின் அடிப்படையில் 1984 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் ஆய்வுத் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில், திருமலைராயன் ஆற்றையொட்டி உள்ள மண் மேட்டுக்கு அருகில் சோழ மாளிகை கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது. நந்தன்மேட்டில் முதுமக்கள் தாழியில் சிறு மட்கலங்கள், மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள் கிடைத்தன.
மேலும், பழையாறைக்கு அருகில் படை வீரர்களின் வீடுகள் இருந்திருக்கின்றன. இதன் அடிப்படையில் அழைக்கப்பட்ட ஆரியப்படை வீடு, பம்பப்படை வீடு, புதுப்படை வீடு, மணப்படை வீடு ஆகியவை இப்போது ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர் எனத் தனித்தனி ஊர்களாக மாறியுள்ளன.
இந்நகரில் இருந்த 19 கோயில்களில் பல கால வெள்ளத்தில் அழிந்துவிட்டன. தற்போது, பட்டீச்சரம் தேனுபுரீஸ்வரர் கோயில், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நாதன்கோவில், கோபிநாதப்பெருமாள் கோயில், இராமநாதசுவாமி கோயில் என்கிற பஞ்சவன்மாதேவீச்சரம், சோமநாதசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்கள் மட்டுமே உள்ளன.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சு. இராசவேலு தெரிவித்தது:
சோழர்களின் கல்வெட்டுகளில் இந்நகரத்தில் இருந்த அரண்மனை குறித்து கூறப்பட்டுள்ளது. மதுராந்தகன் திருமாளிகை என அழைக்கப்பட்ட இந்த அரண்மனையில் ஆதிபூமி, சனி மண்டபம், இராஜேந்திர சோழன் மண்டபம் போன்றவையும் இருந்துள்ளன.
பழையாறையில் சோமேஸ்வரர் சிவாலயக் கோயில் கட்டடக் கலை முற்காலச் சோழர்களின் அமைப்பில் உள்ளது. இக்கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் தேவாரப் பாடல் பாடிய புகழ்பெற்ற தலமாக உள்ளது. இக்கோயிலின் இறைவனை சந்திரன் வழிபட்டதாகக் கூறுவர். சோமேஸ்வரர் கோயிலின் கோபுரம் பிற்காலச் சோழர் படைப்பு. இதை அடுத்து இரு தள விமான அமைப்புடைய கோபுரம் உள்ளது. மூலவர் கோயில் முழுவதும் கற்றளியால் ஆனது. இறைவி சோமேஸ்வரி என வழங்கப்படுகிறார்.
இக்கோயிலின் தூண்களில் உள்ள பிற்காலக் கல்வெட்டுகள் கோயில் தூண்களைக் கொடையளித்தவர் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றன. முதலாம் இராஜேந்திரன் காலத்தில் இவ்வூர் புகழ்பெற்றிருந்தது. முதலாம் இராஜராஜன் இவ்வூர் அரண்மனையிலிருந்து பல கட்டளைகளை அளித்ததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவரது தமக்கை குந்தவை பிராட்டியாரைக் குறிக்கின்ற ஒரு கல்வெட்டில் சோழ மன்னர்களுக்கு உரிய நகரம் என இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளது. எனினும் பிற்காலக் கல்வெட்டுகளே இவ்வூரில் உள்ளன.
பழையாறை அருகிலுள்ள பஞ்சவன்மாதேவீச்சரம் என்ற கோயில் முதலாம் இராஜேந்திர சோழன் தனது தாயாரும் முதலாம் இராஜராஜனின் அரசியுமான பஞ்சவன்மாதேவிக்காக எடுத்த பள்ளிப்படைக் கோயில். தாராசுரத்தைச் சுற்றிலும் சோழ அரசர்களின் பள்ளிப்படைக் கோயில்கள் பல இருந்துள்ளதை தாராசுரத்திலுள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது.
Comments
Post a Comment