நாகை டச்சுக் கல்லறைகள்…

ஒவ்வொரு முறையும் நாகப்பட்டினத்தை  கடந்துச் செல்லும்  பொழுது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ள டச்சுக் கல்லறைகளை காண வேண்டும் என்ற ஆவல் எப்பொழுதும் உண்டு!  அதற்கான நேரம் சமீபத்தில் தான் கிடைத்தது.

பல்லவர்,சோழர்கள் ஆட்சியில் நாகை சிறப்புற்றிருந்தது போல் அந்நியராட்சியிலும் முக்கிய நகரமாகவும், துறைமுகமாகவும் இருந்துள்ளது.

போர்ச்சுகீசியர்கள் வசம் இருந்த நாகை கி.பி. 1658 இல் டச்சுக்காரர்கள் கைக்கு மாறியுள்ளது.1658 லிருந்து 1781 வரை நாகையில் டச்சுக்காரர்களின் ஆட்சியே இருந்துள்ளது.

நாகையில் டச்சுக்காரர்களின் கோட்டை இருந்தற்கான அடையாளம் இல்லையென்றாலும், அவர்களில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடங்களில் அமைக்கப்பட்ட  கல்லறைகள் இன்றும் அவர்களின் அடையாளமாக இருந்து வருகிறது.
நாகை இரயில் நிலையம் அருகில் பழைய CSI சர்ச் வளாகத்தில் அமைந்துள்ள டச்சுக் கல்லறைகளில் சிறப்புற்றது இராணி கல்லறை என்ற அமைப்பு.

3 அடி உயரம், 5 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட மேடை, அதன் மேல் அழகிய மண்டபம். இது நாகையை கி.பி. 1704 இல் ஆட்சி செய்த டச்சு ஆளுநர்  ஜோனஸ் வான் ஸ்டிலண்ட் என்பவரின் மனைவியின் கல்லறை.
ஆளுநரின் மனைவி அந்தோனியோ நிலோ ஸ்டிலண்ட் தனது நான்காவது குழந்தை பிரசவத்தின் பொழுது இறந்துள்ளார். அவரும், அவரது இறந்த குழந்தையும், அதற்கு முன்பு இறந்த தனது மூன்று ஆண் குழந்தைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே கி.பி. 1709 இல் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இறந்த நான்கு குழந்தைகளின் பெயர்களும் இந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.
இதன் அருகில் தூபி வடிவிலான கல்லறை, இது  மற்றொரு ஆளுநர் ஜோகப் மோசல் என்பவரின் மனைவி அட்ரியானா மோசலியின் கல்லறை.தனது ஒரே மகள் அம்மை நோயினால் இறந்ததில்   மனம் உடைந்த அட்ரியானா தனது 27 வயதில்  கி.பி. 1743 இல் இறந்து போனார்.
நாகை St. Peters Church இல் உள்ள ஒரு குறிப்பில் அட்ரியானா இறந்த 
அன்று நாகையின் அனைத்து தேவாலய மணிகளும் நாள் முழுவதும் சுருண்டன. டச்சுக் கப்பலில் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் துப்பாக்கிகள் வான் நோக்கிச் சுட்டன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்று இக்கல்லறைத் தோட்டத்தில் புதருக்குள் போர்ச்சுகீசிய, டச்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கல்லறைகள் புதையுண்டுள்ளன.தற்பொழுது தமிழக  தொல்லியல் துறை இதன் பராமரிப்பு பணியை தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கின்றது.
நாகை சுனாமி குடியிருப்பு அருகிலும் டச்சுக் கல்லறைகள் காணப்படுகிறது.இதில் நான்கு கல்லறைகளின் கல்வெட்டுகள் சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளன. ஒன்று மட்டுமே மேடையுடன் காணப்படுகிறது.
டச்சு மொழியில் பொறிக்கப்பட்டுள்ள இந்த கல்வெட்டுகளில் கி.பி. 1667, 1673 மற்றும் 1680 இல் இறந்து போன எலிசபெத் மிண்டா, கார்ளெலிஸ் கிளாசென், ஐசக் வெல்சிஸ் வான்ஹீன் போன்றோரின் பெயர்கள் பதிக்கப்பட்டுள்ளது.மற்ற இரு கல்வெட்டுகளின் செய்திகள் சிதைந்துள்ளது.

இந்த கல்லறைகளை கண்டறிந்து சென்றது கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. இராணி கல்லறைக்குச் செல்லும் பொழுது நாய் கூட்டம் துரத்தியதும், சுனாமி குடியிருப்பு கல்லறையைக் காண பூட்டிய கம்பி கேட்டை ஏறி குதித்ததையும் மறக்க முடியாது.

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.