தமிழகத்தின் மீதான இஸ்லாமியப் படையெடுப்புகள்
பதினான்காம் நூற்றாண்டில் தமிழகம் அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுக் கிடந்தது. வடக்கில் இஸ்லாமியப் படையெடுப்புகளால் நிகழ்ந்த மாற்றங்களில் பாதிப்பு எதுவும் அடையாமல் இருந்த தமிழகத்தின் மீது வடக்கிலிருந்து வந்த இஸ்லாமியப் படையெடுப்புகளினால் முற்றிலும் மாற்றமடைந்து தமிழக அரசர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. தென்னாட்டில் பொதுவாக நிலவிய ஒற்றுமையின்மையினாலும் அதனைவிடவும், பாண்டிய நாட்டில் நிகழ்ந்த வாரிசுரிமைப் போர்களாலும் மிகவும் பலவீனமடைந்திருந்த தமிழகத்தின் மீது தொடர்ச்சியாக நிகழ்ந்த இஸ்லாமியப் படையெடுப்புகள் சூறாவளியாகத் தாக்கின. இஸ்லாமிப்படைகளின் பாதம் படாமல் இருந்த தமிழ் நிலப்பரப்பினை டெல்லி சுல்தானின் படைத்தலைவர்களான மாலிக்கஃபூரும், குஸ்ரூகானும், உலூக்கானும் சின்னாபின்னமாக்கினர். இந்தப் படையெடுப்புகளைத் தொடர்ந்து பலவீனமடைந்திருந்த த்மிழகத்தின் மீது பிற அன்னியரும் தங்களின் ஆளுகையைச் செலுத்த இஸ்லாமியப் படையெடுப்புகள் வழிகோலியது. இந்த நிலையே 1947-ஆம் வருடம் இந்தியா சுதந்திரமடையும் வரை தொடர்ந்து வந்திருப்பதனை நாம் காணலாம். மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்திற்குப் பிறகு பலவீனம...