அசோகர் கல்வெட்டுகள் கூறும் சோழதேச சோழர்கள்:

அசோகர் தனது சொற்களை இந்தியத் துணைக்கண்டம் முழுக்கப் பதிவு செய்திருக்கிறார். அவை சொற்கள்தாம் என்பதையும் சொன்னவர் அசோகர் என்பதையும் கண்டுபிடிக்க, நமக்குக் கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. எல்லோருடனும் நெருங்கிவந்து உரையாட விரும்பிய ஒருவரின் குரல், இவ்வளவு நீண்ட காலம் மறைந்திருந்தது உண்மையிலேயே துயரம்தான். தன் காலத்தோடு மட்டுமல்ல எதிர்வரும் காலத்தோடும் உரையாட வேண்டும் என்பதால்தான், அழுத்தந்திருத்தமாகக் கற்களில் தன் சிந்தனைகளை வெளிப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார் அவர்.

ஓர் அரசர் தன் ஆணையைத் தெளிவாக எழுத வேண்டும். நல்ல எழுத்தர்கள்மூலம் ஆணைகள் அழகிய கையெழுத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். எழுத்தர்கள் அரசர் சொல்வதைக் கூர்மையாகக் கவனித்து, கவனமாக எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்துகிறது அர்த்தசாஸ்திரம். ஆனால், அசோகருக்கு முந்தைய ஆணைகளில் ஒன்றுகூட நமக்குக் கிடைக்கவில்லை என்கிறார் நயன்ஜோத் லாஹிரி. அதற்குக் காரணம் அவை எழுதப்பட்ட விதம் என்கிறார். பொதுவாகப் பனை ஓலை, மரப்பட்டை, பருத்தி துணி ஆகியவற்றில்தான் அரசரின் சொற்கள் பதிவு செய்யப்பட்டன. மரப் பலகைகளையும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். இவை அனைத்துமே அழியும் தன்மை கொண்டவை என்பதால், காலப்போக்கில் அவை மண்ணோடு மண்ணாகிவிட்டன. அசோகரும்கூட, ஆரம்பத்தில் முந்தைய மன்னர்களைப் போல் ஓலைச்சுவடி முதல் மரப்பட்டை வரை பலவற்றில் ஆணைகளைப் பிறப்பித்திருக்க வேண்டும். இந்த வழக்கமும் கலிங்கத்துக்குப் பிறகே மாறியிருக்கிறது.

செய்திப் பரிமாற்றத்தில் 2 அடிப்படை மாற்றங்களைக் கொண்டுவந்தார் அசோகர். ஒரு மன்னர், பொதுவாகப் பணியமர்த்தப்பட்ட இளவரசர்களோடும் நிர்வாகிகளோடும் அலுவலர்களோடும்தான் உரையாடுவார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்றெல்லாம் அவர்களுக்குத்தான் ஆணைகள் அனுப்புவார். வணிகம், வரி வசூல், போர், தண்டனை முறை, நிர்வாகம் என்று அலுவல் தொடர்பான செய்திகளே ஒரு மன்னரிடமிருந்து அவருக்குக்கீழ் பணியாற்றுபவர்களுக்குச் சென்றுசேரும். வாசித்து, அதன்படி பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். திட்டங்கள் தீட்ட வேண்டும். ‘என் ஆணைகளும் செய்திகளும் கற்களில் பதிவு செய்யப்பட வேண்டும்’ என்பது, அசோகர் கொண்டுவந்த முதல் மாற்றம். என் சொற்கள் எனக்குக்கீழ் பணிபுரிபவர்களுக்கானவை மட்டுமல்ல; அவை பொதுமக்களுக்கானவை. எல்லோரும் வாசிப்பதற்கானவை என்பது 2-வது மாற்றம்.

பொதுமக்களின் வாழ்விடங்களுக்கு அருகிலும் அவர்கள் கூடும் இடங்களிலும் காணக்கிடைத்த பாறைகளில் அசோகரின் சொற்களை முதலில் பொறிக்க ஆரம்பித்தார்கள். ஓலையிலோ பட்டையிலோ எழுதப்பட்ட செய்தி கையில் இருக்கும். வசதியான பாறையொன்றைக் கண்டுபிடித்து அதனருகில் அமர்ந்து செதுக்கிவிட்டுத் திரும்பிவிடுவார்கள். இது முதல் நிலை. பிற்காலத்தில் பாறையைக் காட்டிலும் மேலான தகவல் தொடர்பு சாதனமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. எழுத்துருக்களைப் பதிவு செய்யும் முறையும் தொழில்நுட்பமும் முன்பைவிட இப்போது கொஞ்சம் நவீனமடைந்திருக்க வேண்டும். அழகியல் உணர்வும் மாறியிருக்க வேண்டும். பாறைகளை விடுத்து, தூண்களில் எழுதத் தொடங்கினார்கள்.

வாராணசிக்கு அருகிலுள்ள சுனார் எனும் இடத்திலிருந்து மணற்கற்களைத் தருவித்து, அழகிய, பளபளப்பான தூண்கள் உருவாக்கப்பட்டன. அசோகரின் ஒவ்வொரு ஆணையும் அவர் பகிர்ந்துகொள்ள விரும்பிய ஒவ்வொரு செய்தியும் ஒரு தூணில் பதிவு செய்யப்பட்டது. பாறையில் எழுதுவதைவிட அதிக நேரமும் உழைப்பும் எடுக்கும் பணி. ஆட்களை வைத்து கற்களைக் கொண்டுவர வேண்டும், செதுக்கித் தூணாக மாற்ற வேண்டும், அதன்பிறகே எழுத்துகளைப் பொறிக்க முடியும். என்றாலும் இயற்கையாக அமைந்த பாறையைக் காட்டிலும் நிலப்பரப்பில் தன்னந்தனியே உயர்ந்து எழுந்து நின்றுகொண்டிருக்கும் ஒரு தூண் அதிகம் பேரைக் கவர்ந்திழுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அசோகர் காலத்தில் மட்டுமல்ல அதன்பிறகும்கூடப் பாறைகளைக் காட்டிலும் தூண்களே அதிகம் கண்டு, வியக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் எவ்வளவு தூண்களை அசோகர் உருவாக்கினார் என்பது தெரியவில்லை. நமக்குக் கிடைத்திருப்பவை 10. ஒவ்வொன்றும் 40 முதல் 50 அடி உயரம் கொண்டவை. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 50 டன் எடை கொண்டவை.

அசோகரின் கல்வெட்டுகளை 4 பெரும் பிரிவுகளுக்குள் தொகுத்துக்கொள்ளலாம். பாறையிலா, தூணிலா எங்கே பொறிக்கப்பட்டுள்ளன என்பதை வைத்தும் அவை சிறியவையா பெரியவையா என்பதை வைத்தும் இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.

1) பெரும் தூண் கல்வெட்டுகள்

2) சிறு தூண் கல்வெட்டுகள்

3) பெரும் பாறைக் கல்வெட்டுகள்

4) சிறு பாறைக் கல்வெட்டுகள்

கிடைத்துள்ள பெரும் பாறைக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 14. தூண்களின் எண்ணிக்கை 7. சிறு பாறைக் கல்வெட்டுகள் 15. இவை போக, குகைகளிலும் எழுத்துகள் கிடைத்துள்ளன. கந்தஹாரில் கிரேக்க மொழியிலும் அராமிக் மொழியிலும் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பாறைக் கல்வெட்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுக்கப் பரவியிருக்கின்றன என்றால் தூண் கல்வெட்டுகள் கங்கைச் சமவெளியில் மட்டும் குவிந்திருந்தன.

 அசோகரின் ஆணை

கல்வெட்டுகளின் மொழி, வகைகள், கட்டமைப்பு உள்ளிட்டவற்றை நெருக்கமாக ஆராய்ந்து புதிய கோணங்களை அளித்தவர்களில் ஒருவர், கே.ஆர். நார்மன். ஒவ்வொரு கல்வெட்டோடும் ஒரு கடிதத்தை அசோகர் இணைத்திருக்க வேண்டும் என்கிறார் இவர். கல்வெட்டு எங்கே அமையவிருக்கிறதோ அந்த இடத்தின் நிர்வாகிக்கு இக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அந்த நிர்வாகி அசோகரின் கடிதத்தைப் படித்து, அவர் பகுதியில் வாகான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அசோகரின் செய்தியைத் தகுந்த ஆட்களை வைத்துப் பொறித்திருக்க வேண்டும். சில நிர்வாகிகள் அசோகரின் கடிதத்தைப் படித்துவிட்டு, அதிலுள்ள செய்தியை மட்டும் தனியே பிரித்து கல்வெட்டில் பொறித்திருக்கிறார்கள். ஒரு சிலர் கடிதத்தின் சில வரிகளையும் சேர்த்தே பொறித்திருக்கிறார்கள். செய்தியோடு சேர்ந்து முழுக் கடிதமும் நமக்குக் கிடைத்திருக்கிறது என்கிறார் நார்மன்.

குறிப்பிட்ட செய்தி அசோகரிடமிருந்து வருவது என்பதை நிர்வாகி உணர வேண்டும் என்பதால், கடிதம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். கல்வெட்டைப் படிக்கும் மக்களுக்கும் இது இன்னாரின் செய்தி என்பது சந்தேகத்துக்கு இடமின்றி தெரிந்தாக வேண்டும். எனவே, ‘தேவனாம்பிய பியதசி சொல்கிறார்...’ என்றோ ‘தேவனாம்பிய பியதசியின் உத்தரவின்படி இது எழுதப்பட்டுள்ளது’ என்றோ குறிப்பிட்டு, தன் செய்தியைப் பகிர்ந்துகொள்கிறார் அசோகர். பெரும்பாறைக் கல்வெட்டுகள் அனைத்திலும் அசோகரின் பெயர் முதலில் இடம்பெற்றுவிடுகிறது. கர்நாடகத்தில் உள்ள மஸ்கியில் கிடைத்துள்ள கல்வெட்டில் அசோகா எனும் பெயரும் மத்தியப் பிரதேசத்திலுள்ள குஜ்ஜராவிலுள்ள கல்வெட்டில் ‘பியதசி அசோக ராஜா’ எனும் பெயரும் காணப்படுகின்றன. அசோகர் தன்னை அழைத்துக்கொள்ளும் பெயர் இந்தப் பகுதி மக்களுக்கு ஒருவேளை புரியாமல் போய்விடுமோ என்று யோசித்து, அசோகரின் பெயர் இங்கே சேர்க்கப்பட்டிருக்கும் என்கிறார் நார்மன். வேறு சில இடங்களிலும் இதே காரணத்துக்காக அசோகர் எனும் பெயரை இடம்பெறச் செய்திருக்கிறார்கள். இந்த முடிவை அநேகமாக உள்ளூர் நிர்வாகி எடுத்திருக்கலாம்.

எங்கே கல்வெட்டு அமைய வேண்டும் என்பதை அசோகரே குறிப்பிட்டிருப்பதற்கான சான்றும் கிடைத்துள்ளது. ஜுனாகத்திலுள்ள கிர்நார் எனும் இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டு (பெரும் பாறைக் கல்வெட்டு 1) இவ்வாறு தொடங்குகிறது: ‘இதை மலைகளில் பதிவு செய்ய வேண்டும்.’ அசோகரின் செய்தியோடு அவர் எழுதியனுப்பிய கடிதத்திலிருந்து இந்த ஒரு வரியும் எப்படியோ இங்கே இடம்பெற்றுவிட்டது. இது அசோகரின் வரி; எனவே அதையும் சேர்த்து எழுதிவிடுவோம் என்று கல்வெட்டு பொறித்தவர் நினைத்திருக்கலாம். சில தூண்களிலும் பலகைகளிலும்கூட இதே போன்ற அசோகரின் கடிதத்திலிருந்து சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘அசோகரின் ஆணையின்படி இந்தக் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது’ எனும் குறிப்பையும் சில இடங்களில் காணமுடிகிறது. அப்படிப்பட்ட இடங்களில் அசோகர் தெளிவான சில கூடுதல் உத்தரவுகளைப் பிறப்பித்திருக்க வேண்டும்.

பல இடங்களில் ஒரே செய்தி ஒரு சொல்கூட கூடாமல், குறையால் ஒன்றுபோல் கிடைத்திருக்கின்றன. ஆனால் செய்தியோடு வந்த அசோகரின் கடிதத்தை நிர்வாகிகள் மாறுபட்ட முறையில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எடுத்துக்காட்டுக்கு, 2-வது பெரும்பாறைக் கல்வெட்டுகள் 7 இடங்களில் கிடைத்திருக்கின்றன. எல்லாவற்றிலும் ஒரே செய்திதான் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், நான்கில் மட்டும் கூடுதலாக ஒரு வரி உள்ளது. ‘உன்னுடைய அதிகாரியிடம் இதை ஒப்படைத்து அவருக்குக் கீழே பணிபுரிபவர்களிடம் சேர்க்கச் சொல்லவும்.’ மற்ற மூவரும் இந்த வரி அநாவசியமானது. அசோகரின் செய்தியை மட்டும் பொறிப்போம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். தவறுதலாகவே இடம் பெற்றிருந்தாலும் இந்த ஒரு வரியைக் கொண்டு, வெவ்வேறு மட்டங்களில் பேரரசரின் செய்தி விநியோகிக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

ஹரியாணாவில் உள்ள டோப்ரா எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 7-ம் பெரும் தூண் கல்வெட்டு மற்றும் 1963-ம் ஆண்டு கந்தஹாரில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட ஒரு கல் பலகையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள். மேலே நாம் கண்ட தூணில் இடம்பெற்றுள்ள அதே செய்தி இந்தப் பலகையிலும் இடம்பெற்றிருந்ததைக் கண்ட பிறகே செய்திகளைப் பரப்புவதற்குப் பாறை, தூண் போக பலகைகளையும் அசோகர் கையாண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். இந்தப் பலகையின் இன்னொரு சிறப்பம்சம், அராமிக், பிராகிருதம் என்று இரு மொழிகளிலும் செய்தி இடம்பெற்றிருப்பது.

தூணில் என்ன பொறிக்க வேண்டும், அதை முதலில் சங்கத்திடம் எப்படிக் காட்ட வேண்டும், அதன்பின் அதே செய்தியை எப்படிப் பரவலாக மற்றவர்களிடம் கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என்பதையெல்லாம் அசோகர் விரிவாக விவரித்திருப்பதை சாரநாத்தில் காண முடிகிறது. ஆக, அசோகர் இரண்டு குறிப்புகள் அனுப்பியிருக்கிறார். கல்வெட்டில் பொறிக்க வேண்டிய செய்தி, அதை எவ்வாறு பொறிக்க வேண்டும் என்பதற்கான விளக்கம். ஆனால் எழுதுபவர் தவறுதலாகக் கடிதத்தையும் செய்தியையும் சேர்த்தே பொறித்துவிட்டார். அசோகரின் கடிதத்தைப் பொறித்திருக்கக் கூடாது என்பது கிட்டத்தட்ட கடைசி வரிக்கு வந்து சேரும்போதுதான் கல்வெட்டு செதுக்குபவருக்குத் தெரிந்திருக்கிறது. எனவே, கடிதத்தின் கடைசி வரியை அப்படியே அறைகுறையாக நிறுத்திவிட்டு சட்டென்று அசோகரின் செய்திக்குத் தாவிவிடுகிறார். இப்படிக் கல்வெட்டுகளில் தென்படும் பிழைகளிலிருந்தும்கூட நாம் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது என்கிறார் நார்மன்.

அசோகரின் பல கல்வெட்டுகளில் அவை எப்போது பொறிக்கப்பட்டன எனும் தகவலும் இடம்பெற்றிருக்கிறது. அசோகர் ஆட்சியில் அமர்ந்த ஆண்டுதான் அடிப்படையான ஆண்டு. 8-ம் ஆண்டில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது, 12-ம் ஆண்டில் இது பொறிக்கப்பட்டுள்ளது என்றால், ஆட்சியில் அமர்ந்த ஆண்டிலிருந்து கல்வெட்டின் காலத்தைக் கணக்கிட வேண்டும். ஆட்சிக்கு வந்த 8-ம் ஆண்டு என்பது 8-ம் ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறதா அல்லது ஆண்டு நிறைவையா என்பதில் வரலாற்றாசிரியர்கள் மத்தியில் ஆரம்பத்தில் சில குழப்பங்கள் நிலவின. ஆரம்பத்தில் எழுதப்பட்ட நூல்களிலும் பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் இந்த ஆண்டுக் குழப்பம் நிலவுவதைக் காணலாம்.

சில கல்வெட்டுகளில் பவுத்தத்தோடு அசோகர் கொண்டிருந்த தொடர்பை அடிப்படையாகக் கொண்டும் ஆண்டுக் கணக்கு அமைந்திருக்கின்றன. எடுத்துக்காட்டுக்கு 1-ம் பெரும்பாறைக் கல்வெட்டில் ‘உபாசகராக மாறி இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு’ எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது. கல்வெட்டுகளை மட்டுமல்ல, அவற்றின் ஆண்டுகளையும் தொகுத்துக்கொண்டே அசோகரின் வாழ்க்கைக் குறிப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. எந்தக் கல்வெட்டு எதன் பின்னால் பொறிக்கப்பட்டது என்பதும் இந்த ஆண்டுக்கணக்கைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. ஓரிடத்தில், பாடலிபுத்திரத்திலிருந்து கிளம்பிய 256-வது நாள் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று குறிப்பிடுகிறார் அசோகர்.

பாடலிபுத்திரத்திலிருந்து ஒரேயொரு கல்வெட்டுகூட நமக்குக் கிடைக்கவில்லை என்பது பெருஞ்சோகம் என்கிறார் நார்மன். மவுரியப் பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்த பாடலிபுத்திரத்தில் கல்வெட்டுகள் கிடைத்திருந்தால், அதன் மொழிதான் மவுரியப் பேரரசின் ஆட்சி மொழியாகவும் இருந்திருக்கும் என்று நாம் வாதிட்டிருக்கலாம். சான்றுகள் இல்லாததால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை என்கிறார் நார்மன்.

அசோகரின் கல்வெட்டுகளிலும் சரி, அவர் அனுப்பியதில் நமக்குக் கிடைத்திருக்கும் கடிதங்களிலும் சரி, குறிப்பிட்ட மொழியில்தான் குறிப்பிட்ட இடத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட வேண்டும் என்பது மாதிரியான எந்த அறிவுறுத்தலையும் காண முடியவில்லை என்றும் நார்மன் குறிப்பிடுகிறார். அந்தந்த இடங்களிலிருந்த நிர்வாகிகளே பொருத்தமான மொழியை அல்லது எழுத்துருவைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.

அசோகர் தான் தெரிவிக்க விரும்பிய செய்தியை எழுத்தில் அல்லாமல் வாய் வழியாகவே முதலில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்கிறார் நார்மன். அல்லது அசோகர் தன்னிடம் தெரிவித்ததை அவர் உதவியாளர் எழுத்தருக்கு வாய் வழியே சொல்லியிருக்கலாம். அசோகரோ அல்லது அவர் உதவியாளரோ சொல்லச் சொல்ல குறைந்தது இரண்டு எழுத்தர்கள் பிராமி எழுத்துருவில் அதை எழுதியிருக்கலாம். அதன்பின் ஒப்பிடப்பட்டு, சரிபார்க்கப்பட்ட பிறகு பல பிரதிகள் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒவ்வொன்றும் அசோகரின் கடிதத்தோடு இணைக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம். இது நார்மனின் ஊகம். கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள சின்னச் சின்ன தவறுகள், அந்தத் தவறுகள் ஒன்றுபோல் இருந்தவை ஆகியவற்றைக் கொண்டு அவர் இந்தப் பார்வையை முன்வைக்கிறார்.

முதலாம் தனிப்பாறைக் கல்வெட்டின் வாசகங்கள்.

‘எல்லோரும் என் குழந்தைகள். என் குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவேனோ, அவர்கள் எவ்வளவு நலத்தோடும் வளத்தோடும் இருக்க வேண்டும் என்று விரும்புவேனோ அவ்வறே எல்லா மனிதர்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் விருப்பம் எவ்வளவு தீவிரமானது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது!’
அசோகர் தனது 2ஆம் கல்வெட்டில் தனது சாம்ராஜ்யத்துக்கு வெளியே உள்ள சுதந்திரமான தனியரசுகளைப் பற்றியும்,13ஆம் கல்வெட்டில் சுதந்திரமான மற்றும் தனது ஆட்சிக்குட்பட்ட அரசுகள் பற்றியும் கூறுகிறார்.

அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்

பேரரசர் அசோகர் தனது ஆட்சிக் காலத்தில் (கிமு 3-ஆம் நூற்றாண்டில்), இந்தியத் துணைகண்டத்தின் தற்கால இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானித்தான் மற்றும் வங்காளதேசம் நாடுகளின் பாறைகளிலும் மற்றும் தூண்களிலும் தனது கட்டளைகளையும் மற்றும் கௌதம புத்தர் அருளிய அறநெறிகளையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டி பொறித்து வைத்தார். அவைகள் பின்வருமாறு:

சிறு பாறைக் கல்வெட்டுக்கள்

அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்

    அசோகரின் காந்தார அரமேயம் கல்வெட்டு, பழைய காந்தாரம், ஆப்கானித்தான்
    புல்-இ-தருந்தே அராமேயக் கல்வெட்டு, ஆப்கானித்தான்
    அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு, பஞ்சாப், பாகிஸ்தான்
    மகாஸ்தங்கர், வங்காளதேசம்
    மஸ்கி, ராய்ச்சூர் மாவட்டம், கர்நாடகா
    அக்ரௌரா, மிர்சாபூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா
    அசோகரின் தில்லி கல்வெட்டுக்கள்
    பைரத், ஜெய்ப்பூர் மாவட்டம், இராஜஸ்தான்
    குஜ்ஜரா, ஜான்சி அருகில், ததியா மாவட்டம், மத்தியப் பிரதேசம்
    ஜபல்பூர் அருகில் உள்ள ரூப்நாத், கைமூர் மலைத்தொடர், மத்தியப் பிரதேசம்
    பாங்குராரியா, செஹோர் மாவட்டம், மத்தியப் பிரதேசம்
    சோகௌரா, கோரக்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம்
    சாசாராம், ரோத்தாஸ் மாவட்டம், பிகார், இந்தியா
    பராபர் குகைகள், ஆசீவகத் துறவிகளுக்கு கொடையாக அளித்தது குறித்த கல்வெட்டு
    மகாஸ்தான், போக்ரா மாவட்டம், வங்காளதேசம்
    ரஜுலா-மந்தாகிரி, பட்டிக்கொண்டா அருகில், கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
    சுவர்ணகிரி, கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
    பல்கிகுண்டு மற்றும் கவிமத், கொப்பள் மாவட்டம், கர்நாடகா
    பிரம்மகிரி, சித்திரதுர்க்கா மாவட்டம், கர்நாடகா
    சதிங்கா-ராமேஷ்வரா, பிரம்மகிரி அருகில், சித்திரதுர்க்கா மாவட்டம், கர்நாடகா
    சித்தாப்பூர், பிரம்மகிரி அருகில்
    நித்தூர், பெல்லாரி மாவட்டம்,கர்நாடகா
    உதயகோலம், பெல்லாரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்

சிறு தூண் கல்வெட்டுக்கள்

அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தூண் கல்வெட்டு, சாரநாத்

    லும்பினி, நேபாளம்
    நிகாலி சாகர், லும்பினி அருகில் நேபாளம்
    சாரநாத், வாரணாசி அருகில் உத்தரப் பிரதேசம்
    கௌசாம்பி (பின்னர் அலகாபாத் நகரத்திற்கு முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரால் மாற்றப்பட்டது) உத்தரப் பிரதேசம்
    சாஞ்சி, போபால் அருகில், மத்தியப் பிரதேசம்

14 பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்

அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
கிரேக்க & அரமேய மொழியில் எழுதப்பட்ட பாறைக் கல்வெட்டுக்கள், பழைய காந்தாரம், கிமு 3-ஆம் நூற்றாண்டு
சன்னதி எனுமிடத்தில் பிராமி எழுத்துமுறையில் அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டு.

    அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள் (கிரேக்கம் மற்றும் அரமேய எழுத்துக்கள் கொண்டது), ஆப்கானித்தான்
    சபாஷ் கார்கி, (கரோஷ்டி எழுத்தில்), கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
    மன்செரா பாறைக் கல்வெட்டு, (கரோஷ்டி எழுத்தில்), கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்
    அசோகரின் கல்சி பாறைக் கல்வெட்டு, டேராடூன் மாவட்டம், உத்தராகண்ட், இந்தியா
    அசோகரின் குஜராத் பெரும்பாறைக் கல்வெட்டுக்கள், குஜராத், இந்தியா
    நள சோப்ரா, பால்கர் மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
    தௌலி, புவனேசுவரம் அருகில், ஒடிசா, இந்தியா
    ஜௌகுடா, கஞ்சாம் மாவட்டம், ஒடிசா, இந்தியா
    சன்னதி, குல்பர்கா மாவட்டம், கர்நாடகா, இந்தியா
    கூட்டி, கர்நூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா

7 பெரும் தூண் கல்வெட்டுக்கள்
அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
கிமு 250 காலத்திய பிராமி எழுத்தில் அசோகரின் தூண் கல்வெட்டு, லௌரியா-ஆராராஜ், பிகார்

    அலகாபாத் தூண், தில்லி
    அசோகரின் தோப்ரா கலான் கல்வெட்டு, தில்லி
    அசோகரின் மீரட் தூண், தில்லி, தில்லி
    அசோகரின் காந்தாரக் கல்வெட்டுகள், காந்தாரம், ஆப்கானித்தான், (உடைந்த தூண் எண் 7)
    லௌரியா நந்தன்காட், பிகார் (தூண் கல்வெட்டு எண்கள் I, II, III, IV, V, VI)
    லௌரியா-ஆராராஜ், பிகார், (தூண் கல்வெட்டுக்கள் I, II, III, IV, V, VI)
    ராணிகட், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான்

    வைசாலி, பிகார் - கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை
    ராம்பூர்வா போதிகைகள் - பிகார் - கல்வெட்டுக் குறிப்புகள் இல்லை

அசோகர் கல்வெட்டுகளில் சோழர்கள்:

அசோகர் தனது 2ஆம் கல்வெட்டில் தனது ஸாம்ராஜ்யத்துக்கு வெளியே உள்ள சுதந்திரமான தனியரசுகளைப் பற்றியும்,13ஆம் கல்வெட்டில் சுதந்திரமான மற்றும் தனது ஆட்சிக்குட்பட்ட அரசுகள் பற்றியும் கூறுகிறார்.

அசோகரது கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு குஜராத் மாநிலம் கத்தியவாரில் கிடைக்கப்பெற்ற முக்கியமான ஒரு கல்வெட்டாகும்.

2ஆம் கல்வெட்டு:

அசோகரின் கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு

அவரது அண்டை நாட்டவர்களான சோழர், பாண்டியர், ஸத்தியபுத்திரர், கேரளபுத்திரர், தாம்ரபர்ணீ, யவன அந்தியோகஸ் மற்றும் அந்தியோகஸின் அண்டை நாட்டவரான ஏனைய அரசர்கள்.

"ஏவமபிர் பப்ரசன்தேஸு யதா சோடா பாடா ஸதியபுதோ கேதலபுதோ ஆ தம்பபண்ணீ அன்தியோகோ யோன ராஜா யே வா பி தஸ அன்தியோகஸ ஸாமீபா ராஜானோ…."
அரசன் : அசோகன்
வம்சம் : மௌரியர்
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
மொழி : பிராகிருதம்
எழுத்து : அசோகன் பிராமி
நோக்கீடு : Inscriptions of Asoka by D.C. Sircar, 1957, Corpus Inscriptionum Indicarum
அசோகர் கல்வெட்டு பாடம் (தமிழில்)

1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்

செய்தி :

அசோகர் வழக்கம்போல் இக்கல்வெட்டிலும் தேவனுக்குப் பிரியமானவன் என கவுதம் குறிப்பிடப்பெறுகின்றார். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான சேர, சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர், யோன அரசரான அன்டியோகஸ் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகைச் சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும் பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் பரிபோக்யமாக, சுபமாக வாழவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.

முக்கியத்துவம் :

இக்கல்வெட்டில் தமிழகத்தில் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வம்சம்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் (பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் வாழ்ந்தது விளங்கும்.

தமிழக வரலாற்றை குறிப்பாக சங்க காலத்தை பொ.ஆ.8ஆம் நூற்றாண்டு என மிகவும் பின்னோக்கி கொண்டு செல்லும் “டிக்கன்” போன்ற அறிஞர்களின் கருத்துக்களைத் தவறானவை என இக்கல்வெட்டு கொண்டு மெய்ப்பிக்கலாம்.

தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி தமிழ் அரசர்களின் சிற்றரசர்காளாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவு.

அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

13ஆம் கல்வெட்டு:

அசோகரின் 13ஆம் பெரும்பாறைக் கல்வெட்டு

அமைவிடம்:-பாகிஸ்தான் மாநிலம், பெஷாவர் மாவட்டம், சபாஷ்கார்கி என்ற ஊரின் பாறையில் உள்ளது
காலம் :பொ.ஆ.மு. 257 -256
எழுத்து்: கரோஷ்டி
மொழி்:பிராகிருதம்
அரசர்: அசோகர்
வம்சம் :மௌரியர்

600 யோஜனைகளுக்கு அப்பால் யவன அந்தியோகஸ் ஆளுகிறார்,அவருக்கும் அப்பால் துலாமய, அந்திகேன, மக, அலிகஸுந்தர எனும் நான்கு அரசர்கள் உள்ளனர். தெற்கில் சோழர்கள், பாண்டியர்கள், தாம்ரபர்ணீ.

மேலும் அரசரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள யவனர்கள்,காம்போஜர்கள், நாபகர்கள், நபபக்ன்திகள், போஜர்கள், பிதினியகர்கள், ஆந்த்ரர்கள், பலதர்கள் ஆகியோர் தேவனாம்பியரின் தம்ம போதனைகளை பின்பற்றுகின்றனர்.

"ஸ ச புன லதோ தேவனம்ப்ரியஸ இஹ ச ஸவேஷு ச அன்தேஷு அஷுஷு பி யோஜன ஸுதேஷு யத்ர அன்தியோகோ நம யோன ரஜ பரம் ச தேன அன்தியோகேன சதுரே ரஜனி துரமயே நம அன்தகினி நம மக நம அலிகஸுந்தரோ நம நிச சோட பண்ட அத தம்பபணிய|ஏவமேவ ஹித ரஜவிஷவஸ்பி யோனக கம்போஜயேஷு நபக நபிதின போஜ பிதிநிகேஷு அந்த்ர பலிதேஷு ஸர்வத்ர…."

கல்வெட்டுச் செய்தியும் முக்கியத்துவமும்

தேவனுக்கும் மக்களும் பிரியமான ராஜாவின் எட்டாவது ஆட்சியாண்டில் கலிங்கம் வெற்றிக்கொள்ளப்பட்டது. இதனால் லட்சத்திற்கு மேற்பட்ட மனிதர்களும் விலங்குகளும் உயிரோடு கொல்லப்பட்டனர். இதனால் வருந்திய அசோகர் தமக்கு பின்னர் வரும் தமது வழித்தோன்றல்கள் அனைவரும் தர்மத்தினால் வரும் வெற்றியையே வெற்றியாகக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகின்றார். இதுவே இக்கல்வெட்டின் சாரமாகும்.

இக்கல்வெட்டு அசோகரது 8ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பெற்றுள்ளது. அசோகர் புத்த மதத்திற்கு மாறியுள்ளார் என்பதை இக்கல்வெட்டுக்கொண்டு அறியலாம். அசோகர் கலிங்கப்போர் புரிந்த பிறகு அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளைக் கண்டு வருந்தி தர்மத்தினால் பெறும் வெற்றியே உண்மையான வெற்றி எனத் தாம் உணர்ந்து அதர்மத்திலிருந்து தர்மத்திற்கு மாறியதையே இக்கல்வெட்டுக் கூறுகிறது. இச்செய்தியை தமது நாட்டிற்கு மட்டுமின்றி பிற தேசங்களுக்கும் அறிவிக்கச் செய்துள்ளார். இவ்வகையில் இக்கல்வெட்டில் அசோகருக்குச் சமகாலத்தில் வாழ்ந்த இந்தியா மற்றும் பிற தேசங்களில் வாழ்ந்த அரசர்கள் குறிப்பிடப்பெறுகிறார்கள். அவ்வகையில் சங்ககாலத் தமிழக மன்னர்களான சேர, சோழ, பாண்டிய வம்சத்தினர் இதில் குறிப்பிடப்பெறுகின்றனர். அது மட்டுமன்றி மேற்கு ஆசிய மன்னர்கள் அன்டியோகஸ் (Antiochus II) தியோஸ் (261 - 46 B.CE), எகிப்தின் மன்னர்கள் டுரமாயா (Ptolemy II Philadelpus (285 - 47 BCE)), அந்திகினி, அன்டிகோனஸ், கோனாடஸ் போன்ற மசிடோனிய மன்னர்களும் (Antikini, - Antigonos, Gonatas (277 - 239BC)) தென் ஆப்பிரிக்கா - சைரினிலுள்ள மகர்கள் (yMaga - Magas 272 - 255 BC) அலிகசுதரா (அலெக்ஸாண்டர் - Alexander (272 - 255) of Epirus or of Corinth) போன்றோரும் குறிப்பிடப் பெறுகின்றனர்.

தாம்ரபணி (ஸ்ரீ லங்கா), யவனர்கள், காம்போஜர்கள், நாபகர்கள் நாபபங்க்திஸ், போஜர்கள், பைத்ரியனிகர்கள், ஆந்திரர்கள், புலிந்தர்கள் (இவர்கள் மஹாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் வாழ்ந்த வந்த மக்களினத்தவராவார்கள்) போன்றோரும் குறிப்பிடுப்பெறுகின்றனர். இவர்களையும் தாண்டி செய்தியை எடுத்துச் செல்பவர்கள் செல்ல இயலாத இடங்களுக்கும் தம்மம் போதிக்கப்பெறவேண்டும் என்று அசோகர் ஆணையிட்டுள்ளார்.

அசோகரின் பேரரசின் தெற்கெல்லை வடபெண்ணை ஆற்றின் தெற்கு வரை இருந்தது. எர்ரகுடியில் கிடைக்கும் அவரது இரு கல்வெட்டுகளால் இதை அறியமுடிகிறது. இதனால் கர்னூல், கடப்பா, நெல்லூர் மற்றும் அதற்கும் தெற்கில் மௌரியப் பேரரசு பரவியிருந்தது என்பது தெரிகிறது. மேலும் 2ஆம் கல்வெட்டில் அண்டை நாட்டு அரசர்களாக குறிப்பிடப்படும் ஸத்தியபுத்திரர் மற்றும் கேரளபுத்திரர் 13ஆம் கல்வெட்டில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. எனவே அவர்கள் அசோகரின் ஆளுகையின் கீழ் வந்திருக்க வேண்டும்.

இதற்கும் தெற்கே சோழ,பாண்டிய,இலங்கை அரசுகள் உள்ளன என்று அசோகர் கூறுகிறார்.

எனவே "தெலுங்கு" ரேனாடு சோடர்கள் மௌரியர் காலத்திலேயே இருந்தனர் எனும் ஒரு பேச்சுக்கு உண்மை என்று ஏற்றாலும் அவர்கள் அசோகரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தனர் என்று ஆகும்.

மேலும் அசோகர் ஆந்த்ரர்கள் தனது ஆளுகைக்கு உட்பட்டவர்கள் என்று கூறுகிறார். இந்த ஆந்த்ரர்கள் மஹாராஷ்ட்ரத்தில் இருந்த போஜர்களின் (பிற்பாடு மஹாபோஜர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்) பக்கத்து நாட்டவர்.இவர்கள் விதர்பா மற்றும் பேரார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ஆபஸ்தம்ப தர்மஸூத்ரம் இவர்கள் யமுனை நதிக்கரையில் வாழ்ந்தவர்கள் என்று கூறுகிறது.தாலமி (பொ.யு.100-170) தனது "Geography"ல் ஸிரே புலுமாயிஸ் எனும் அரசர் ப்ரதிஷ்டானத்தை தலைநகராகக் கொண்டிருந்தார் என்று கூறுகிறார்.

மேலும் ஆந்த்ரர்கள் என்று பிறரால் அழைக்கப்பட்ட, கல்வெட்டுகளில் ஸாதவாஹனர்கள் என்று அழைக்கப்படும் இவர்களின் பழைமையான கல்வெட்டுகள் நாசிக்கிலுள்ள பாண்டவ்லேனி குகைகள், நானேகாட் மற்றும் மாளவத்திலுள்ள விதிசாவில் கிடைக்கின்றன. இவை கன்ஹர் (பொ.யு.மு.100-70), முதலாம் ஸாதகர்ணியின் (பொ.யு.மு.88-50) மற்றும் இரண்டாம் ஸாதகர்ணி  (பொ.யு.மு.50-25) ஆகியோரின்  கல்வெட்டுகள்.

எனவே அசோகர் கல்வெட்டுகள் கூறும் "சோடர்கள்" சோழதேச சோழர்கள் தான் என்பது உறுதியாகத் தெரிகிறது.

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.