இந்த சிலையை எப்படிச் செய்திருப்பார்கள்? எனச் சிந்தித்தால் ஆச்சரியமாக உள்ளது.
நடன மங்கை...
நடன மங்கை (Dancing girl) என அழைக்கப்படும் இந்த சிலை
சிந்து சமவெளி நாகரீக மக்களால் 4500 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டது. இந்த மங்கை நிற்கும் அழகைப் பாருங்கள். இவளுக்கு சுமார் 14 வயதிருக்கும் என வல்லுநர்கள் கணிக்கிறனர். இடுப்பில் கைவைத்து ஒய்யாரமாக நிற்கும் பாணி அவள் தன்நம்பிக்கையை உணர்த்துகிறது. மிடுக்கான தோரணை அவள்
வாழ்க்கையில் வைத்துள்ள பிடிப்பு தெரிகிறது. அந்த நேர் கொண்ட பார்வை மகிழ்ச்சியை அப்பட்டமாகக் காட்டுகிறது.
இந்த சிலை சுமார் 10 சென்டிமீட்டர் உயரம்தான் உள்ளது. இந்த சிலையை 1929ல் எர்னஸ்டு ஜெ. எச். மாக்கே கண்டுபிடித்தார். இவர் ஒரு தொல்லியல் ஆய்வாளர் மேலும் இங்கிலாந்துக்காரர். இது ஒரு வெங்கலச் சிலை.
வெண்கலம் என்பது ஒரு உலோகக் கலவையகும். தற்போதைய வெண்கலம் 88 விழுக்காடு தாமிரமும் 12 விழுக்காடு வெள்ளீயத்தினாலும் (Tin) ஆனது. ஆனால் சிந்து சமவெளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்தில் தாமிரத்துடன் 2லிருந்து 8 விழுக்காடு ஆர்சனிக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நடன மங்கை சிலை கண்டுபிடிக்கப்பட்ட இடம் இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இப்போது புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பின்னர் இது மாதிரி மீண்டும் ஒரு சிலை பாக்கிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அது இவ்வளவு நேர்த்தியானது அல்ல. ஆனால் கிட்டத்தட்ட இதே மாதிரியான சிலைதான் அது. மேலும் இந்த சிலை மாதிரியே பானை ஓட்டில் வரைந்த ஓவியம் ஒன்றும் இந்த பகுதி கண்டெடுக்கப்பட்டது.
ஆக, ஒரே மாதிரியான உருவத்தை நிறையச் சிலையாக வடித்துள்ளது தெரிகிறது. இவை விளக்குவது என்னவென்றால் இந்த பெண் ஒரு பிரபல நாட்டியக்காரியாகவோ; மன்னனின் மகளாகவோ; அல்லது ஒரு வேளை சிலை கன்னி வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாமோ எனச் சிந்தனையும் எழத்தான் செய்கிறது. கன்னி என்ற தெய்வ நம்பிக்கை நம் ஊரில் இன்றும் மக்களிடையே உள்ளது.
"இந்த சிலையை எப்படிச் செய்திருப்பார்கள்?" எனச் சிந்தித்தால் ஆச்சரியமாக உள்ளது.
சிலை செய்ய இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று கல்லைச் செதுக்கி ஒரு உருவத்தைக் கொண்டு வருவது. இந்த முறையில் அழகு உலோக சிலை செய்ய முடியாது. உலோக சிலை செய்ய உருக்கிய உலோகத்தை ஒரு அச்சியில் ஊற்றவேண்டும். இது ஆறிய பின்னர் அதை எடுத்தால் சிலை கிடைக்கும். இதற்கு வார்ப்பு முறை என அழைக்கப்படுகிறது. இதுதான் சிலை செய்ய இரண்டாவது முறையாகும்.
சரி.
இந்த இளம் பெண்ணின் உருவச் சிலை செய்ய அச்சி எப்படி உருவாக்கப்பட்டிருக்கும்?
ஒரு அச்சியை உருவாக்கக் களிமண்ணில் அல்லது மெழுகில் இந்த பெண்ணின் உருவம் செய்யப்படுகிறது. இந்த சிலை நன்கு காய்ந்து இறுகும் வரை பொறுத்திருக்கின்றனர். பின்னர் கல் மற்றும் தூசு இல்லாத பக்குவமான களிமண்ணில் சிலையை அழுத்துகிறனர்.. பின்னர் இந்த சிலையை அலுங்காமல் குலுங்காமல் எடுக்கப்படுகிறது. இப்போது களிமண்ணில் சிலையின் அச்சு பதிந்திருக்கும். இந்த அச்சி சற்று இறுகும் வரை காத்திருக்க வேண்டும். பின்னர் வெங்கலத்தை உருக்க வேண்டும். இதற்கு 913 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை அவசியம். இவ்வளவு சூடான உலோக திரவத்தை எடுத்துச் சிந்தாமல் சிலரால் பக்குவமாக ஊற்ற வேண்டும். ஊற்றும் போது அச்சி கலையக்கூடாது. ஊற்றும் நபரின் கை கால்களில் பட்டால் அவ்வளவுதான்.. நிரந்தர குறைபாடோ அல்லது உயிரிழப்போ ஏற்படும். அச்சியில் ஊற்றிய இந்த உலோக கலவை இறுகும் வரை காத்திருக்கின்றனர். இது இறுகிய பின்னர் எடுத்தால் சிலை கிடைத்துவிடும்!
இந்தவகை சிலை தயாரிப்பில் ஒருவரின் முக அமைப்பு மற்றும் முன்புற தோற்றத்தை மட்டும் உருவாக்கலாம். ஆனால் முப்பரிமாண சிலை கிடைக்காது.
முப்பரிமாண சிலை அமைப்பது இன்னும் சிக்கலானது. அதற்கு மெழுகில் ஒரு முப்பரிமாண சிலை செய்கிறார்கள். பின்னர் அந்த சிலையைச் சுற்றி கல் மற்றும் தூசு இல்லாத பக்குவமான களிமண் நிறையப் பூசப்படுகிறது. இப்போது களிமண்ணுக்குள் மெழுகு சிலை உள்ளது. சிலையின் கால் பகுதி அல்லது தலைப் பகுதியில் ஒரு ஓட்டையை உருவாக்குகின்றனர். அதன் வழியாக உருக்கிய வெண்கலத்தை ஊற்றுகின்றனர். உருகிய வெங்கலத்தின் வெப்ப நிலை 913 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும். இந்த அதீத சூட்டில் மெழுகு எறிந்து புகையாக ஓட்டை வழியே வெளியேறுகிறது. ததும்பத் ததும்ப உருக்கிய வெங்கலம் ஊற்றப்படுகிறது. பின்னர் இது ஆறிய பின் சுற்றி உள்ள களிமண் அகற்றப்படுகின்றன. உள்ளே மெழுகு சிலை இருந்த இடத்தில் இப்போது வெங்கல சிலை அப்படியே தத்துருவமாக இருக்கும். ஊற்றிய இடத்தில் ஊற்றி தழும்பு தெரியும். அதனால் உருக்கிய வெண்கலத்தை ஊற்றப் போடப் படும் அந்த ஓட்டையைச் சிலையின் கால் பகுதியில் அமைத்து, அதன் வழியாக வெங்கலத்தை ஊற்றினால் பார்க்கும் படியாகச் சிலையில் எந்த வித்தியாசமும் தெரியாது.
இப்படித்தான் முப்பரிமாண வெண்கலச்சிலைகள் இன்றும் உருவாக்கப் படுகிறது !
இந்த சிலையில் உள்ள பெண்ணின் சிலையைப் பாருங்கள். அவள் முகத்தை உற்றுப் பாருங்கள். உருண்டை முக அமைப்பு. கண்கள் சற்று பெரிதாக இருக்கிறது. உதடு மற்றும் மூக்கின் வடிவத்தைக் கவனியுங்கள். உதடு சற்று தடித்துக் காணப்படுகிறது. மொத்தத்தில் இந்த பெண் யார் மாதிரி இருக்கிறாள்?
ஆப்பிரிக்கப் பெண்ணா?
ஐரோப்பியப் பெண்ணா?
சீனப் பெண்ணா?
மேற்கண்ட மூன்றுமில்லை என்பதை முகத்தின் வடிவம் கணிக்கத் தூண்டுகிறது. மேலும் இந்த பெண்ணின் ஒரு கையில் நான்கு வளையல்களும்; அடுத்த கையில் 25 வளையல்களும் அணிந்துள்ளாள்.
இதே மாதிரி அடுக்கடுக்காக கை முழுவதும் வளையல்களை இன்றும் ராஜஸ்தான் பகுதியில் மக்கள் அணிந்து வருவதைப் பார்க்க முடிகிறது.
மேலும் இந்த சிலையில் உள்ள பெண்ணின் முகத்தை தற்போது அந்த பகுதியில் வாழ்ந்து வரும் மக்களின் முக அமைப்பை ஒத்துப் பார்த்தால் ஒன்றாக இருப்பதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது. சுமார் 4000 வருடங்களுக்குச் சிந்து சமவெளி நாகரிகம் மக்கள் இன்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் வாழ்வதாகவே எண்ணத்தோன்றுகிறது.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சிந்து சமவெளிப் பகுதியில் கிடைத்த ஒரு மனித எலும்பை மரபணு ஆராய்ச்சி செய்தார்கள். அந்த மரபணு ஆராய்ச்சி தமிழகத்தைத்தான் கைகாட்டுகிறது. அதாவது ஊட்டியில் உள்ள மலைவாழ் மக்களின் மரபணுவும் சிந்து சமவெளி நாகரிக மக்களின் மரபணுவும் பெருமளவில் ஒத்துப் போவதைக் கண்டறிந்துள்ளனர். முகத் தோற்றத்தில் இந்த நடன மங்கையும் மலைவாழ் மக்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக நான் கருதுகிறேன்.
மேலும் பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் தமிழ் கிளை மொழி பேசும் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இந்த மொழியை ப்ராகூய் ( Brahui) என அழைக்கப்படுகிறனர். இந்த மொழி மிகவும் பழமையானது எனவும் கண்டறிந்துள்ளனர். ப்ராகூய் பேசும் மக்கள் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து மேற்கே சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
சிந்து சமவெளிப் பகுதி தமிழகத்திலிருந்து வடக்கே சுமார் 4000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மேலும் கிழக்கே சுமார் 1500 கிலோமீட்டர் தொலைவில் நேபாளம் உள்ளது. இங்கும் தமிழ் கிளை மொழி பேசும் மக்கள் இன்றும் இருக்கிறனர். நேபாளத்திலிருந்து கிழக்கே 1000 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு வங்காளம் உள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் ஜார்ஜ்கன்ட் மாநிலப் பகுதியில் மால்டோ (Malto) என்ற தமிழ் கிளை மொழி பேசும் மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
ஆக..
ஏதோ காரணம்..
இயற்கை சீற்றமோ?
தொற்று நோயோ?
கயவர்களின் படை எடுப்போ?
என்ன நடந்தது எனச் சரியாகத் தெரியவில்லை.
ஆனால் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து மேற்கே சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவிற்கும், கிழக்கே 2500 கிலோமீட்டர் தொலைவிற்கும் மேலும், தெற்கே 4000 கிலோமீட்டர் தூரத்திற்கும் மக்கள் சிதறுண்டுள்ளனர் எனப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் இந்த நாகரிகப் பகுதிக்கு வடக்கே தமிழ் கிளை மொழி எதுவும் கண்டறியப்படவில்லை. இன்றும் கண்டறியப்பட்டால் கூட இருந்திருக்கலாம். இந்த மக்கள் வடதிசையில் இடம் பெயரவில்லையே ஏன்? இந்த கேள்விக்குச் சரியான பதில் கண்டறியப்பட வேண்டும்.
இந்த பகுதிக்கு வடக்கே சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் திபெத் உள்ளது. திபெத்திய மொழியும் தமிழுடன் தொடர்புடையதுதான் என்ற தகவலும் இருக்கத்தான் செய்கிறது. உண்மை நிலை அறிய நிறைய ஆராய்ச்சிகள் தேவை.
டாக்டர் பாலகிருஷ்ணன் (இந்திய ஆட்சிக்குழு) சிந்து சமவெளி நாகரிகப் பகுதியை ஆராய்ந்து இன்றும் அங்கே தொண்டி, மதுரை, கொற்கை, என்ற தமிழக பெயர்களைத் தாங்கிய நிறைய ஊர்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளார்.
ஒரிசா பாலு இந்தியப் பெருங்கடலில் உள்ள நிறையத் தீவுகளில் இன்றும் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதாகக் கூறுகின்றனர். கடந்த 200 ஆண்டுகளில் அவர்களின் முன்னோர்கள் யாரும் தமிழகம் வந்ததில்லை என்கிறார். இயற்கை சீற்றம் காரணமாக கன்யாகுமரிக்கு தெற்கே வாழ்ந்த மக்கள் சிதறுண்டு பல தீவுகளில் குடியேறியுள்ளனர் என்பதே அவரின் வாதம்.
ஆக வடக்கே இருந்து அதாவது சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து நாம் தெற்கே நகர்ந்து தமிழகத்தில் வாழ்ந்து வருகிறோமா?
அல்லது தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கி நகர்ந்து சிந்து சமவெளிப் பகுதிக்குச் சென்றோமா?
"நிறைய தொல்லியல் ஆய்வுகள் செய்யவேண்டும் உண்மை என்ன?" எனக் கண்டறியப்பட வேண்டும்..
எல்லாம் சரி..
உங்களுக்கு இந்த நடன மங்கையின் முகத்தைப் பார்த்தால் என் தோன்றுகிறது? பதிவிடுங்களேன் பார்ப்போம்.
Comments
Post a Comment