அவர்கள் போற்றப்படாததற்கு முக்கிய காரணம் அவர்களின் அவைதீக சார்பு.
தென்னகப் பகுதியில் முதல் பேரரசர்கள் மூவேந்தர்கள் அல்ல. பேரரசு என்றால் வெவ்வேறு அரசுகளை தன் ஆளுகைக்கு கீழ் கொண்டுவருவது.
கரிகால பெருவளத்தான் காலத்திலேயே பல பகுதிகளை வென்று, சோழப் பேரரசை உருவாக்க முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
தென்னகப் பகுதியில் மூவேந்தர்களையும், அவர்களின் மூன்று வெவ்வேறு அரசுகளையும் வெற்றி கொண்டு ஒரே ஆளுகைக்கு கீழ் கொண்டுவந்து பேரரசு என்று ஒன்றை உருவாக்கியவர்கள் களப்பிரர்கள். களப்பிரர் வீழ்ந்தபோது, சாளுக்கியர் முதல், பாண்டியர் வரை களப்பிரரை வென்றதை பெருமையாக தங்களின் சாசனங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
களப்பிரர் வென்ற சேர சோழ பாண்டிய மன்னரின் பெயர்கள் தெரிவில்லை. மூவேந்தர்களையும் இவர்களின் கீழடங்கியிருந்த சிற்றரசர்களையும் களப்பிரர் வென்றனர் என்று வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனம் கூறுகிறது. "அளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னுங் கலி அரைசன் கைக் கொண்ட " னன் என்று வேள்விக்குடிச் செப்பேட்டு வாசகம் கூறுகிறது.
களப்பிரரின் போர்க்கள வெற்றியைப் பழைய வெண்பா ஒன்று கூறுகிறது. மிகத் தொன்மை வாய்ந்த அந்த வெண்பா கி.பி. 10 - ம் நூற்றாண்டு நூலாகிய யாப்பருங்கலம் என்னும் யாப்பிலக்கண நூலின் விருத்தியுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்
கொடியும் கழுகுமிவை கூடி - வடிவுடைய
கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு
போமாறு போமாறு போம்
என்பது அந்தப்பாடல். களப்பாள (களப்பிர) அரசனுடைய சேனைகள் போர்க்களத்துக்குப் போகும் போது, பேய்களும், நரி, ஓநாய், நாய், பருந்து, கழுகு முதலான பிணந்தின்னிப் பிராணிகளுக்கு அந்தச் சேனையோடு போயின என்று இச்செய்யுள் கூறுகிறது. அதாவது போர்க்களத்தில் போர்வீரர்களும்
குதிரைகளும் செத்து மடியுமாகையால் இந்தப் பிணந்தின்னிப் பிராணிகளும் இறைச்சி விருந்து கிடைத்தது என்பது இதன் கருத்து. களப்பாள அரசன் மற்ற அரசர்களோடு போர் செய்து வெற்றி பெற்றான் என்பது இதன் திரண்ட பொருள்.
மற்றும் நான்கு பழைய வெண்பாக்களை யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிறது. அந்தப் பழைய வெண்பாக்கள், களப்பிர அரசன் சேர, சோழ, பாண்டியரை வென்று அவர்களைச் சிறையிலிட்டுத் தளை (விலங்கு) இட்டபோது அந்த மூவரசர்களால் பாடப்பட்டவை. யாப்பருங்கல விருத்தியுரை மேற்கோள் காட்டுகிற அந்தப் பழம் பாடல்கள், பிற்காலத்தில் தனிப்பாடற்திரட்டு, புலவர் புராணம் முதலான நூல்களிலும் சேர்க்கப்பட்டுள்ளன. அப்பழம் பாடல்கள் இவை;
சேர மன்னன் பாடியது :
"தினை விதைத்தார் முற்றந் தினை யுணங்கும், செந்நெல்
தனை விளைத்தார் முற்ற மதுதானாம் - கனைசீர்
முரசுணங்கும் சங்குணங்கும் மூரித்தேர்த் தானை
அரசுணங்கும் அச்சுதன்தன் முற்றத்து"
சோழ அரசன் பாடியது :
"அரசர்குல திலகன் அச்சுதன் முற்றத்தில்
அரச ரவதரித்த வந்நாள்- முரசதிரக்
கொட்டிவிடு மோசையினுங் கோவேந்தர் காற்றளையை
வெட்டிவிடும் ஓசை மிகும்
பாண்டிய மன்னன் பாடியது !"
"குறையுளார் எங்கிரார் கூர்வே லிராமன்
நிறையறு திங்கள் இருந்தான் -முறைமையால்,
ஆலிக்குத்தானை யலங்குதார் அச்சுத ! முன்
வாலிக் கிளையான் வரை
இதைக் கேட்ட அச்சுதக் களப்பாளன் பாண்டியனுக்கு இன்னொரு தளை இட்டான். "
அப்போது பாண்டியன் இன்னொரு வெண்பாவைப் பாடினான்.
"குடகர் குணகடலென் றார்த்தார் குடகர்க்
கிடகர் வடகடலென்றார்த்தார் - வடகடலர்
தென்கடலென் றார்த்தார் தில்லையைச் சுதானந்தன்
முன்கடை நின்றார்க்கும் முரசு"
இந்தக் களப்பிர அரசனை இப்பாடல்கள் அச்சுதன் என்று கூறுகின்றன.
அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப்பெயர் என்று தோன்றுகிறது. அச்சுதன் என்பது விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று. பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது. இன்னொரு தமிழ்ச் செய்யுள் ஒன்று இன்னொரு களப்பிர அரசனை அச்சுதன் என்று கூறுகிறது. ஆகையால் களப்பிர அரசர்கள் ஒவ்வொருவரும் அச்சுதன் என்று பெயர் கொண்டிருந்தனர் என்பது தெரிகின்றது.
அச்சுதன் என்னும் களப்பிர அரசனைக் காத்தருள வேண்டும் என்று திருமாலை வேண்டுகிறது. (புயலுறழ் தடக்கைப் போர்வேல் அச்சுதன், தொன்று முதிர் கடலுலகம் முழுதுடன் ஒன்றுபுரி திகிரி உருட்டு வோன் எனவே)
அலைகடற் கதிர்முத்தம் என்று தொடங்கும் இன்னொரு செய்யுள், களப்பிர அரசன் சங்கு சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டு அவன் அருளினால் பெரிய நிலத்தை ஆளும் பேறுபெற்றான் என்றும் அந்த அரசனை அருகக் கடவுள் காத்தருள வேண்டும் என்றும் வேண்டுகிறது. அகலிடமும் அமருலகும் என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள் ஒரு களப்பிர அரசனுடைய ஆற்றல், கொற்றம், வீரம் முதலியவற்றைப் புகழ்கிறது. அதில் அந்தக் களப்பிர அரசன் அச்சுதர்கோ என்று கூறப்படுகிறான். அதாவது அச்சுத குலத்தில் பிறந்த அரசன் என்று கூறப்படுகிறான். நலங்கிளர் திருமணியும் என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள், செங்கோல் விண்ணவன் (விண்ணன் விஷ்ணு) என்றும் களப்பிர அரசனுடைய ஆட்சி ஓங்கவேண்டும் என்றும் அருகக் கடவுளை வேண்டுகிறது.
அதனால் களப்பிரர்கள் வைணவர்கள் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
வியப்பு என்னவென்றால், முதல் பேரரசர்களின் காலம் தமிழகத்தின் வரலாற்று பக்கங்கள் இல்லாத இருண்டகாலமாகக் கருதப்படுகிறது.
அவர்கள் போற்றப்படாததற்கு முக்கிய காரணம் அவர்களின் அவைதீக சார்பு.
மூலம்: களப்பிரர் ஆட்சியில் தமிழகம்.
Comments
Post a Comment