வகுப்பில் மாணவர்களிடம், நீங்கள் அறிந்த பேரரசுகள் Empire Dynasty பெயர்களைக் கூறுங்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் பிரிட்டிஷ் எம்பயர், பிரஞ்சு எம்பயர், ரோமன் எம்பயர் என்று உலக பேரரசு பெயர்களைக் கூறினார்களே தவிர, தமிழ் பேரரசின் பெயர்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வாறு பயிற்றுவிக்கப்பட வில்லை. ஏன் நாங்கள் படித்த காலத்தில் கூட அப்படியொரு கல்வி இருந்ததாக நினைவிலில்லை. சேர சோழ பாண்டியர் எனும் சொல்லாடல் மூன்று மன்னர்கள் என்று குறுகிய புரிதலை அந்தக் காலத்தில் ஏற்படுத்தியிருந்தது. இலக்கியங்களில் மன்னர்கள் பெயர்கள் வரும்போது, அதனை ஒரு பேரரசின் அங்கமாக நாம் பார்த்ததில்லை. இவற்றை உடைக்க முதலில் நம்மிடம் இருந்த பேரரசின் மன்னர்களின் பெயர்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பொன்னியின் செல்வன் கதையில் இருக்கும் 5 சோழப் பெயர்களைப் பொதுவாக எல்லோரும் கூறுகிறார்கள். ஆனால் சேரப்பேரரசு, பாண்டியப்பேரரசு பெயர்களைக் கேட்டால், ஒன்று இரண்டு என்று திக்கித்திணறி நிற்கிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது. இதனைக் கட்டுடைப்போம் அதற்காக நான் தொகுத்த பட்டியல் கீழ்வருமாறு. நீங்களும் தெரிந்...