தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள். கல்வெட்டுகள் தேவடிச்சி என்றும் கூறுகின்றன. தளிச்சேரி பெண்டுகள் என்றால் அனைவருமே ஆடல் கற்று நடனமாடியவர்கள் அல்ல. இவர்கள் கோவில் இருந்த பல்வேறு பணிக்காக நியமிக்கப்பட்ட இறைபணியாளர்கள். அதில் சிலரே நடனம் கற்று, ஆடல் மகளிராக இருந்துள்ளனர். சிவ பெருமானை தேவர் என்று அழைப்பது வழக்கம். எனவே, இவர்கள் தேவகணிகையர் என்று அழைக்கப்பட்டனர்.
 வைணவ ஆலயங்களில் இறை பணியில் இருந்தோர் "எம்பெருமானடிகள்" என்று அழைக்கப்பட்டனர். கோவிலில் சடங்கு ஏற்பாடு முதல் தூய்மைப்பணி செய்து, ஆடல் வரை பல்வேறு படிநிலையில் தேவரடியார்கள் இருந்துள்ளனர். ஆனால், ஆடல் புரிந்தவருக்கு மட்டும் உரியதாக தேவதாசி அல்லது தேவரடியார் சொல் மாறிவிட்டது. கல்வெட்டுகளில் குறிப்பிடும் தேவரடியார்கள் அனைவருமே ஆடல் மகளிராக இருக்கவேண்டிய கட்டாயமில்லை. எனவே தான் அரசர் குலம் முதல் வணிகர், உழவுக் குடிகள் என எல்லா சமூகத்தில் இருந்தும் தேவரடியார்கள் இருந்துள்ளனர். இவர்களிடையே தலைமை, பணியாள் என வர்க்க வேறுபாடுகள் இருந்துள்ளதை ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். தேவரடியார்களுக்குத்‌ தலைக்கோலிகள்‌, தளிச்சேரிப்‌ பெண்டுகள்‌, பதியிலார்‌, கோயிற்‌ பிணாக்கள்‌ என்றும்‌ பெயர்கள்‌ வழங்கின. கோயிலில்‌ திருவிளக்கிடுவதும்‌, திருமெழுக்கிடுவதும்‌, மலர்‌ தொடுத்தலும்‌, தேவரடியார்கள்‌ மேற்கொண்டிருந்த திருத்தொண்டுகளிற்‌ சில. தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு இப்பதியிலாரை பணிமூப்பிமார் (கோவில் பணியாளர்) என்கிறது. "தேவரடியார் என்றால் தமிழ் என்றும், தேவதாசி என்றால் தெலுங்கு என்றும். நாயக்கர் காலத்தில் தான் தேவரடியாருக்கு பதில் தேவதாசிகளை ஆந்திராவில் இருந்து கொண்டு வந்தனர்" என்று ஒரு பொய்யுரை வலம் வருகிறது. வடமொழி சொல்லான தாசி என்பதன் தமிழ் பதமே அடியார் என்பது. எனவே தேவதாசி என்றாலும், தேவரடியார் என்றாலும் ஒருவரையே குறித்தது. விஜயநகர நாயக்கர் காலத்தில் தெலுங்கில் தேவரடியார்கள் "போகலவாரு" என மரியாதையுடன் அழைக்கப்பட்டனர். அவர்களும் தமிழ் பெண்டிரே. திருவண்ணாமலையில் உள்ள இரு மொழிக் கல்வெட்டில் தமிழ் கல்வெட்டில் தேவரடியார் என குறிக்கப்பட்ட அதே பெண்கள், தெலுங்கு கல்வெட்டில் போகலவாரு என்று குறித்துள்ளனர். ஆந்திரப் பகுதியில் தேவதாசி முறையில் இவர்கள் போகலவாறு, ஜோகினி, சானி, நாகவாசலு என அழைக்கப்பட்டனர். இவையே தெலுங்கு சொற்கள். தேவதாசி என்பது வடமொழி சொல். தேவரடியார் வடமொழி+தமிழ் கலந்த கலப்புச்சொல். மேலும் நாயக்கர் காலத்திலும் இவர்கள் தேவரடியார் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது கல்வெட்டுகள் வாயிலாக தெரிகிறது. மேலும் ஆந்திரப் பகுதிகளில் இருந்து எந்த தெலுங்கு போகலவாரும் கோவிலில் நியமிக்கபட்டதாக சாசனங்கள் இல்லை. ஏற்கனவே இருந்த தேவரடியாருக்கு நிவந்தங்கள் நாயக்கர் காலத்தில் மீண்டும் புதிப்பித்து தரப்பட்டன. பிரச்சனைக்குரிய நிலங்கள் மீட்டுத் தரப்பட்டன. இதனை கல்வெட்டுகள், செப்பேடுகள் கூறுகின்றன. நாயக்கர் காலத்திலும் தேவரடியார் பெண்கள் மண உறவு கொண்டு சந்ததிகளை வளர்த்துள்ளனர் என்பதை அவர்களுக்கு தரப்பட்ட நிவந்தங்களின் மூலம் தெரிகிறது. இந்த பெண்களுக்கு துன்பம் நேராமல் தவிர்க்க தனி அதிகாரிகளே சோழ அரசு நியமித்திருந்தது. எனவே, இப்பெண்களை அக்காலத்திலேயே ஆண் சமூகம் துன்புறுத்தியது திண்ணம். ஒவ்வொரு மன்னர் வீழ்ச்சியுறும் காலத்திலும் இந்த தேவரடியாரின் நிலங்களை நிர்வாகம் செய்தோர் சூறையாடி உள்ளனர். நாயக்கர் காலத்தில் இந்நிலங்கள் மீட்டுக் கொடுக்கப்பட்டது. நாயக்கர் காலம் வீழ்ச்சி உற்றபோது கோவில் நிர்வாகமும் வீழ்ச்சி உற்றதால் இப்பெண்களில் பலர் கைவிடப்பட்டனர். இவர்களை இச்சமூகம் தவறாக பயன்படுத்தியது. உதாரணமாக திருவண்ணாமலை கல்வெட்டில், சேர சோழ பாண்டிய, ஹோய்சாலர் நடைமுறை படுத்திய தேவரடியார் முறையை அப்படியே மீண்டும் புதுப்பிக்கிறேன் என்று தஞ்சை நாயக்கரான செவ்வப்ப நாயக்கர் கூறியுள்ளார். கல்வெட்டு வாசகம் " திருவண்ணாமலை மேலைக்தெரு கீழைத்தெரு தேவரடியாற்கு சிலா சாதனம்‌ பண்ணிக்‌ குடுத்தபடி தங்களுக்கு பூறுவமாக சேர சோழ பாண்டிய வல்லாணராயர்‌ சொமய தேணாயக்கரும்‌. விட்ட கிராமங்களிலும்‌ வீடு நிலத்திலும்........" எனவே, நாயக்கர் காலத்தில் புதிய தேவதாசி முறைகள் ஏதும் உருவாக்கப்படவில்லை. பழைய மூவேந்தர்கள் உருவாக்கிய மரபினரே தேவரடியாராக இருந்துள்ளனர் என்பது உறுதியாகிறது. ஆனால் இந்திய சமயச் சடங்குகளில் பெண்களின் பங்கை உறுதி செய்யும் தேவரடியார் முறை சிறப்பாக இருந்து பின்பு வீழ்ச்சியுற்றது. ஆடல் மகளிர் கூத்தியர் என்றும் அழைக்கப்பட்டனர். தேவரடியார் என்போர் வெவ்வேறு குலம், வெவ்வேறு சமூகம், வெவ்வேறு பொருளாதார பின்புலம், வெவ்வேறு அரசியல் பின்புலமே, வெவ்வேறு அதிகார பின்புலம் உடையவராக இருந்துள்ளனர். எப்படி ஒரு சாதிப் பெயர் வசவுச் சொல்லாக மாறியதோ, அதுபோல தேவரடியார், கூத்தியர் போன்ற சொற்கள் மிகவும் பிற்காலத்தில் தான் வசவுச் சொல்லாக மாறியது. கோவில் தேவதாசி வேறு, பொது மகளிர் எனும் பரத்தையர் வேறு.

Comments

Post a Comment

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.