அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி
- Get link
- X
- Other Apps
மீனா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகின்றார். இவர் தன் தாய் லட்சுமி அவர்களுடன் நெல்லை மாவட்ட அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம்
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்றுள்ளார். அந்த கோயிலுக்கு எதிரே உள்ள மண்டபத்தின் அதிட்டானப் பகுதியின் பட்டிக்குக் கீழே ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். பின்னர் அதனைப் படி எடுத்து வாசித்துள்ளார்.
முதல் வரியில் “சேர” என்ற வார்த்தையும் இரண்டாவது வரியில்
“மொழிந்தருளி” என்றும்; அடுத்த வரியில் “விளக்குச் செல்வதாக’ எனவும்; நான்காவது வரியில் “இவ்வூர் நாலஞ்சேரி” எனவும்; கடையில் வரியில்”இவ்வூர்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
இதனைப் படித்த பேராசிரியர் முருகன் மற்றும் மதிவாணன் “இந்தக் கல்வெட்டின் முழுத் தகவலும் கிடைக்கவில்லை எனவும், இக்கல்வெட்டு இடைக்காலத் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டுள்ளன எனவும், முதல் இரண்டு வரிகளில் கிடைத்த தகவலின் அடிப்படையில் “கொடை அளிக்கும் முன்பு அரசரால் நேரடியாக ஆணையிடப்பட்டதையும், மூன்று மற்றும் நான்காவது வரிகளின் மூலமாக “நான்கு சேரிகள் உள்ளதையும் இந்தக் கல்வெட்டு தெரியப்படுத்துகிறது” என்றனர். இந்த கல்வெட்டு சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
இந்த மண்டபத்திற்கு சற்று தூரத்தில் இருக்கும் கார்த்திகை மடத்தின் வலது புற சுவரில் மேலும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. மாணவி மீனா படியெடுத்து வாசித்தபோது இந்த கல்வெட்டு தலைகீழாக இருந்ததையும், இந்த கல்வெட்டு முழுமையானது இல்லை எனவும், இது ஒரு கல்வெட்டின் கடைசிப் பகுதி எனவும் கண்டறிந்தாள்.
இந்த கல்வெட்டு ஒரு தானம் வழங்கியதை விளக்குகிறது. கல்வெட்டு முழுமையாக கிடைக்காததால் அது என்ன தானம் எனத் தெரியவில்லை. ஆனால் தானத்தை உறுதி செய்ய கையொப்பமிட்டவர்களின் பெயர்கள் இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
அதில் கீட் செம்பி (இராமநாதபுரம்) நாட்டை சேர்ந்தவருமான வேளர் தேவதானமான னுளம்பாதராசன் அவருடைய
கையொப்பமும், மலைப்பார் நாட்டில் உள்ள இடையாற்றூரைச் சேர்ந்தவரும், அவயம்புக்கார் நந்தி அரசன் என்பவனுடைய பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மேற்குறிப்பிடப்பட்ட தானத்திற்கு கையொப்பம் இட்டவர்கள் ஆவார்கள். மலைப்பார் நாடு என்றால் அது சேரநாட்டையே குறிக்கும்.
எழுத்தின் வரி வடிவைக் கொண்டு இந்த கல்வெட்டு சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என பேராசியர்கள் தெரிவித்தனர்.
சேர மன்னர்களின் கல்வெட்டு பாண்டிய நாட்டில் அரிதாகவே கிடைக்கின்றன. எனவே இந்தக் கல்வெட்டு வரலாறு முக்கியத்துவமானது என பேராசியர்கள் தெரிவித்தனர்.
இந்த கல்வெட்டு மடத்தின் சுவற்றில் தலைகீழாகப் பொருத்தப் பட்டுள்ளது. அதாவது கல்வெட்டு பதிக்கப்பட்ட பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்கப்பட்டுள்ளது.
மண்டபங்கள் அழகாக வடிவமைக்கப்பட்ட கருங்கல் தூண்களைக்
கட்டப்பட்டவை. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இந்த மண்டங்களை முழுவதும் பிரித்து எடுத்து அதே கற் தூண்களைக் கொண்டு வேறு வடிவத்தில் மண்டபத்தை கட்டியுள்ளனர்.
அதனால் இந்த கல்வெட்டும் தனித் தனியாக பிரித்து எடுத்து ஆங்காங்கே இந்த மடத்தில் பொருத்தியுள்ளனர். அந்த மண்டபத்தின் பிற பகுதியில் கல்வெட்டின் எழுத்துக்கள் கட்டத்தின் உள்பக்கம் இருக்குமாறு பொருத்தியிருக்கலாம். இதனால் அவைகளை பார்க்க முடியவில்லை.
இந்த கட்டடக்கலை அமைப்பின் படி இந்த மண்டபம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புதான் கட்டப்பட்டது என பேராசிரியர்கள் தெரிவித்தார் கள்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment