காப்பாற்றப்பட வேண்டியது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டும் அல்ல.‌ கடந்த காலமும் தான்.

கட்டுக்கதைகள் கலக்காத இந்தியத் துணைக்கண்ட வரலாற்றை நேர்த்தியாக சுடப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களிலும் "ஆறு கிடந்தன்ன அகனெடுந் தெருக்களிலும் "தான் தொடங்கவேண்டும்.‌ 

யாருக்கும் பிடிக்கிறதோ இல்லையோ அத்தகைய நகர்மய வாழ்வியலின் தரவுசார்ந்த உச்சம் ஹரப்பா மொகஞ்சதாரோவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு.

இந்தியத் துணைக்கண்டத்தின் இத்தகைய நகர்மய வாழ்வியல் பற்றிய துல்லியமான ஆவணப்பதிவு,  யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் "செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசைகளை" கொண்டாடிய;  " இருபால் பெயரிய உருகெழு மூதூர்" என்று நகர் வடிவமைப்பு பேசிய, தென்கோடித் தமிழ்நாட்டின் சங்கத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் தான் உள்ளன.

இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே. 

இவை இரண்டிற்குமான காலம், தூரம் என்ற இருபரிமாண இடைவெளி புதிய அகழாய்வுத் தரவுகளால் சங்க இலக்கியங்களின் புத்தொளி மீள்வாசிப்பால் காணாமல் போகும் அல்லது சுருங்கும்.

ஹரப்பா, மொகஞ்சதாரோ, தோலாவீரா, லோத்தல், தைமாபாத், ஆதிச்சநல்லூர் சிவகளை கொற்கை அழகன்குளம் கொடுமணல் கீழடி இல்லாத இந்தியத் துணைக்கண்ட வரலாற்றை கற்பனை செய்து பாருங்கள். 

உங்கள் கைகளில் இரண்டு இதிகாசங்கள்; சில பத்து புராணங்கள்; தேவலோகத்து ஊர்வசி நடனம்; பத்து தலை அசுரர்கள்; அசுரனாகிப் போன சிந்துவெளி எருமை என்று கதைகள் மட்டும் மிஞ்சும். கலைகளால் நிரம்பி வழிந்த மகத்தான நாகரிகத்தின் குரல்வளைகள் கொலைகளால் நிரம்பி குருதி வழியும்.

"கீழடிக் கிண்ணத்தில் கிருஷ்ணர் சாப்பிட்ட வெண்ணெய் வாசம் இருக்கிறது" என்று கதைகளும் கூடச் சொல்லப்படும்.

வரலாறு என்பது வந்த வழி!

 காப்பாற்றப்பட வேண்டியது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டும் அல்ல.‌ கடந்த காலமும் தான்.

A street at the ancient city of Harappa in Pakistan. 2500-2000 BCE, Indus Valley Civilisation

Photo Courtesy: Alice Smith

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.