ஒரு படையுடன் வணிகம் செய்யும் வணிகர்களுக்கும் போர்க் கலையை கற்க தேவை இருந்தது. எனவே அவர்கள் வீர வணிகர் ஆயினர்.
உள்நாட்டிலேயே வணிகம் பார்க்கும், நிலை வணிகர்களுக்கு அரசரின் உள்நாட்டு காவலும், பாதுகாப்பும் கிடைத்தது.
ஏற்றுமதி இறக்குமதி வாணிகத்தில் நகர்ந்து கொண்டே வணிகம் பார்க்கும் சாத்து வணிகர்களுக்கும், அதே பண்புடைய பிற்கால ஐநூற்றுவ வளஞ்சியர்களுக்கும் எல்லா இடங்களிலும் ஒரே அளவு பாதுகாப்பு கிடைக்குமா என்றால் கிடைக்காது, எனவே தனிப் படை பாதுகாப்பு தேவைப்பட்டது.
வாணிகச் சாத்தர் அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யப் போகும்போது கூட்டமாகச் சேர்ந்து போனதுமல்லாமல் தங்களோடு படை வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். வாணிகச் சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன, மருதன் இளநாகனார், பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைக் கூறுகிறார்,
'மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில்
செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை
வல்வில் இளையர்.'
வழிப்பறிக் கொள்ளயிட்ட வில் வேடரைக் கூறுகிறார்.
'சாத்தெறிந்து
அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக்
கொடுவில் ஆடவர்.'
(அகம், 167: 7-9)
சங்க இலக்கியம் சாத்து என்றாலே படையோடு நடைபெறும் வணிகம் சென்று பொருள் கூறியது. வணிகர்க்குப் பாதுகாவலாகச் செல்லும் வீரர் படை ‘சாத்து’ என்ற பெயராற் குறிக்கப்பட்டது. இப்படையைச் சார்ந்தவன் ‘சாத்தன்’ என வழங்கப் பெற்றான்.
வணிகர்களுக்கு மணிமுடி ஒன்றைத் தவிர அரசர் போன்று ஆயுதம் முதல் ஏனைய எல்லாம் உரியவை என்பதை,
"வில்லும், வேலும், கழலும், கண்ணியும் நாரும், மாடியும், தேரும், மாவ. மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரியன" என்றும் கூறும் தொல்காப்பியப் பாடல் மூலம் அறியலாம்.
வணிகம் பொருட்டு ஏற்படும் பூசலில் இறந்த வணிக செட்டி வீரனுக்கு நடுகல் எடுக்கும் பழக்கமும் இருந்துள்ளது.
தமிழி மற்றும் பல தென்னக பிராமி கல்வெட்டுகள் இவர்களை வீர வணிகர், வீர சேத்தி என்றே பொருள் கூறியது. வணிகர்களே வீரர்களாகவும், தனியே படை வீரர்களையும் கொண்டிருந்தனர். ஒரு அரசன் எவ்வாறு வெறும் நிர்வாகிய மட்டும் இல்லாமல், ஒரு படையை வழி நடத்த போர்க் கலையில் வல்லவராகவும் இருக்க வேண்டுமோ, அதே போல எந்நேரமும் ஆபத்து இருக்கும் அதே நேரத்தில் ஒரு படையுடன் வணிகம் செய்யும் வணிகர்களுக்கும் போர்க் கலையை கற்க தேவை இருந்தது. எனவே அவர்கள் வீர வணிகர் ஆயினர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேரந்த மாலகொண்டா பகுதியில் அமைந்துள்ள, நரசிம்மர் கோவில், முன்பு பௌத்த (ஸ்ரமண?) தளமாக இருந்துள்ளது. ஆங்குள்ள குடைவரையில், திராவிட (தென்) பிராமி எழுத்தமைதியில் உள்ள கல்வெட்டு, அரவாலா குலத்தைச் சேர்ந்த நந்த செட்டி மகன் தமிழ் வணிகன் அளித்த தானத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.
அந்த தமிழ் வணிகனை, ஸ்ரீ வீரி சேத்தி (ஸ்ரீ வீர சிரேஷ்டி), வீரச்செட்டி எனக் குறிப்பிடுகிறது. அவனை அருவால குலம் என்கிறது.
இத்தகைய படைகளில் பணியாற்றியவர்கள் பல்வேறு வீரர் குழுக்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். வேளைக்காறர், கவறைகள், கண்டழி, கண்டச்செட்டி, சிங்கம், வலங்கை, வீரர் என ஏழு குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் மலம்பட்டிக் கல்வெட்டில் இடம் பெறுகின்றனர்.
இவர்களில் கவறைகள், கண்டழி என்ற குழுக்களைச் சேர்ந்த வீரர்களே எண்ணிக்கையில் மிகுதியாக உள்ளனர். தசமடிக் கவறைகள், கொங்கு மண்டலக் கவறைகள் எனக் கவறைகள் இரு பிரிவுகளாக இருந்தனர். இந்த வீரர் கூட்டங்களை, “நம் மக்கள்’ என வணிகக் குழுக்கள் குறிப்பிடுவதன் மூலம் இவர்கள் வீர வணிகர் எனக் கொள்ளலாம்.
திசையாயிரத்து ஐநூற்றுவருக்குத் தொடர்ந்து தொல்லை தந்த இருவரை, வணிகக் குழு வீரர்கள் கொன்றழித்த தகவலை மலம்பட்டிக் கல்வெட்டு தருகிறது. இவ்வாறு வீரதீர செயலில் ஈடுபட்ட வணிக வீரர்ககளை போற்றும் வண்ணம், ஐநூற்றுவ வளஞ்சியர் குழு வீர சாசனம் வெளியிட்டனர். ஐம்பொழில் நகரங்களை வீரர்கள் நினைவாக எறிவீரப்பட்டினங்களாக அறிவித்தனர், மலர் தோட்டங்களை வீரர் நினைவாக உருவாக்கினர்.
வீர என்ற பெயர் அடையாளம் பண்டைய காலத்தில் போரிடும் தன்மையுள்ளவன், படை பாதுகாப்பு வீரன் என்பதைக் குறிக்கும். அனைவருக்கும் அப்பெயர் தர இயலாது. அன்று போரில் ஈடுபட்ட வீரரர்கள் மற்றும் வணிக பாதுகாப்பு வீரர்களுக்கு மட்டுமே அப்பெயர் இருந்துள்ளது.
எனவே தான் ஐம்பொழில் நகரத்தை சேர்ந்த திசை ஆயிரத்து ஐநூற்றுவ வளஞ்சியர் தங்களை வீர வளஞ்சியர் தர்மத்தைக் (நெறி) அலல்து சமயத்தை (குழு) காக்கும் வணிகர்கள் என்றனர். இதனை வணிகப் போர்நெறி நெறி என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வணிகர்களை கொன்ற கள்வர்களை பழித் தீர்ப்பதில் (கொன்று அவர்களின் இரத்தம் குடித்து) ஆகட்டும், நெறியை மீறி வணிகர்ளுக்கு தொல்லைத் தந்தது பணம் பறித்து குற்றம் செய்தவர் சொந்த வளஞ்சியராக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதில் இருந்து இவர்கள் போர் நெறியை பின்பற்றிய வணிகர்கள் என்றே கருதத் தொன்றுகிறது.
சங்க இலக்கியக் காட்சியில்,
"காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்
அதர்கெடுத் தலறிய சாத்தொடு ஓராங்கு
மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
இனந்தலை மயங்கிய நனந்தலைப்"
ஒரு நாள் அடர்ந்த பெருங் காட்டின் வழியே சாத்து வணிகர் நெடுந்தொலை கடந்து சென்றனர். அங்கே, மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உரைசுதலால் ஒள்ளிய தீப்பொறிகளைச் ஏற்பட்டன. விழுந்த பொறிகளின் அருகே, மிகுதியாகக் கிடந்த சருகுகள் எல்லாம் பற்றிக்கொண்டு நெருப்பு மூளத் தொடங்கியது. காற்றானது, நெடிய இடத்திலேயுள்ள உலர்ந்த ஊகம்புல்லின் மேலும், அந்நெருப்பைச் சுழற்றிப் பரவச் செய்தது. காட்டையே அழித்துவிடுவது போன்ற பெரு நெருப்பும் சென்ற இடமெல்லாம் பரந்தது. காட்டுத்தீயில் வணிகச் சாத்து மேலே செல்லுவதைக் கைவிட்டுவிட்டு, மீண்டும் திரும்பியது.
Comments
Post a Comment