தேவரடியாரும் தேவதாசிகளும்
ஆதி காலம் தொட்டு பெண் என்பவள் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருக்கிறாள். பிறப்பிலிருந்து வளரும் சூழலில் இருந்து வேலை செய்யும் முறையில் இருந்து இறப்பு வரைக்கும் பெண் யாரோ ஒருவரால் கட்டமைக்கப்படுகிறாள்.
தேவரடியார் முறையும் தேவதாசி முறையும்
தேவதாசி முறை எனும் பெயரில் பெண்களை சூறையாடி வந்த சடங்குமுறை 1947 ஆம் ஆண்டில் வழக்கொழிந்து போனது. தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.|
தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.
தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காக தானே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் இல்லை.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.
சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள்.
பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவிற்கு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.
தேவதாசிகள் எனப்படுபவர் கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள்.
தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.
குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.
தேவதாசிகளைத் தேர்ந்தெடுக்கும் முறை
தேவதாசிகளாவதற்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண் வேறெந்த ஆடவருடனும் உறவு வைத்திராத தூய்மை வாய்ந்தவளாக இருத்தல் வேண்டும். பின்னர் அவளுக்கு ஆடல், பாடல், அலங்காரம் உட்பட பல்வேறு கலைகளில் வளர்ப்புத் தாயாரால் (தேவதாசி) பயிற்சி அளிக்கப்படுகிறது. தக்க காலம் வந்த பிறகு அவள் ஜெகன்னாதருக்கு மணமுடிக்கப்படுகிறாள். மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு “பொட்டுக் கட்டுதல்” என்றழைக்கப்படும் இந்நிகழ்ச்சி தேவதாசியின் வாழ்க்கையில் முக்கிய நிகழ்வு. அவள் இறக்கும் போதும் மணப் பெண்ணாக அலங்கரிக்கப்பட்டே எரியூட்டப்படுகிறாள்.
இப்படி ஏனைய இந்துப் பெண்களுக்குள்ள ‘விதவை அபாயம்’ தேவதாசிகளுக்கு இல்லையென்றாலும், ஏனைய இந்துப் பெண்களின் மண வாழ்க்கை தேவதாசிகளுக்குக் கிடையாது.
“தமிழகத்தில் தேவதாசிகள்” நூலில் இருந்து –
ஒரு தேவதாசியின் வாழ்க்கை என்பது மிக ஆர்வம் நிறைந்த சுவையான கதை. தேவதாசியாக வேண்டுமென்றால், எந்த ஓர் இளம் பெண்ணும் சில சம்ஸ்காரங்கள் அல்லது வழிச்சடங்குகள் (சிலவற்றின்) ஊடாகப் பயணித்து வர வேண்டும்; அவையாவன:
சடங்குபூர்வமான திருமணம்
அடையாளப்படுத்தும் புனித நிகழ்வு
நிகழ்த்துகலைகளில் ஈடுபடுத்த முன்முயற்சி எடுத்தல்
அரங்கேற்றம்
கடமைகள் மற்றும்
இறுதிச் சடங்காசாரக் கௌரவங்கள்
இவை ஒரு ‘சாதாரண’ இளம் பெண்ணை ‘என்றைக்கும் புனிதமான பெண்’ணாகப் பரிணாம மாற்றமடையச் செய்பவளாக அமைகின்றன. இந்த அடுத்தடுத்த படிநிலைகளையும், இவை உள்ளடங்கிய மற்ற பிற சடங்குகளையும் விவாதிப்பதில் கி.பி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 18ம் நூற்றாண்டு வரையிலான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வயது வரம்பு
கர்நாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்ததைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஊருக்கேற்ப வயது வித்தியாசப்படுகிறது.
பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்றா?
தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபச்சாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை.
தேவதாசிகளின் சமூக சேவை
தேவதாசிகள், பொதுமக்களுக்கான சமூக சேவைகளை மேற்கொண்டனர் என்று சாசனங்கள் பதிவு செய்துள்ளன. விண்ணமங்கலம் என்ற கிராமத்தின் நீர்த்தேக்கம் ஆண்டுதோறும் ஆழப்படுத்தப்பட்டு மராமத்துப் பணிகளும் செய்து வரப்பட்டன. இரண்டு தேவதாசிகளான நாற்பத்தி எண்ணாயிரம் பிள்ளை மற்றும் அவருடைய சகோதரி மங்கையர்க்கரசி ஆகியோர் ஏரி நீரில் மூழ்கியிருந்த நிலங்களைத் தங்களின் செலவில் மறுபயன்பாட்டிற்குக் கொணர்ந்துள்ளனர். அன்னநாடு என்ற இடத்தில் அவர்கள் திருந்திகை நதியை மூடச்செய்து, நீர்த்தேக்கத்தைத் தோண்டி ஆழப்படுத்தி, கால்வாய் அமைத்து பின் நிலத்தை மீட்டெடுத்தனர்.
ஆய்வாளர்கள் கருத்து
“தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன”என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை.
ஒடிஸி நடனத்தைப் பயிலுவதற்காக பூரிக்கு வந்த பெண் அறிஞர், பிரடரிக் ஏ. மார்க்லின் என்ற மனிதவியல் ஆய்வாளர் , “கடவுளரின் மனைவியர்” என்ற தமது புத்தகத்தில் தேவதாசிகளது வாழ்க்கையை விரிவாக ஆராய்ந்திருக்கிறார்.
“பெற்றோர் தமது பெண்களை தேவதாசிகளாக அனுப்புவதற்குக் காரணம் அவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைக்க இயலாத வறுமையே” என்கிறார் மார்க்லின்.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வுகளை நூலாக வெளியிட்டுள்ளார். கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17ம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆராய்ந்துள்ளார்.
தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்;
“கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார். இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்”
அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியார்கள். தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் இல்லை என்று குறிப்பிடுகிறார்.
தேவதாசி வரலாற்றுச் சுவடுகள்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இத்தகைய முறை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் இருந்தது. இறுதியாக தெரியவரும் புள்ளிவிவரப்படி, புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவதாசிகள் பணியாற்றியுள்ளனர்.
தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு (கி.பி1113) கர்நாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது.
1947 ஆம் ஆண்டில் வழக்கொழிந்து போன தேவதாசி முறையின் கீழ் நடனமாடி வந்த பெண்களில் ஒருவர் மட்டும் உயிரோடிருக்கிறார் அவர் 80 வயதான விராலிமலையைச் சேர்ந்த முத்துக் கண்ணம்மாள்.
உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும் பற்றும் அவரை இன்றும் ஆடத் தூண்டுகின்றன. தாளத்திற்கு ஏற்றவாறு பாடிக்கொண்டே ஆடுகிறார். தேவதாசிகளின் முக்கியப்பணி நடனமாடுவது. அந்த ஆட்டக் கலையின் பெயர்தான் சதிர் ஆட்டம். இந்த நடனம் இன்னும் இளமைத் துடிப்போடு இருக்கிறது முத்துக்கண்ணம்மாவிடம்.
சதிர் ஆட்டம் வடிவமும் வீழ்ச்சியும்
கோயிலில் தினமும் நடைபெறும் வழிபாட்டின்போது முருகனைப் பற்றி பாடல் பாடுவதும் சுவாமி வீதியுலாவின்போது நடனமாடுவதுமே இவரது பிரதானப் பணியாக இருந்துள்ளது. அதோடு பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம், தைப்பூசம் போன்ற திருவிழாக் காலங்களில் கும்மி, கோலாட்டம் என சதிர் ஆட்டம் களைகட்டும். அசைவு, அலாரிப்பு, ஜதீஸ்வரம், சங்கராபரணம், தில்லானா, பதம், நோட்டீஸ்வரம் போன்று ஒவ்வொரு பிரிவுகளையும் கற்று, அதில் கைத்தேர்ந்தவர்களையே கோயிலுக்கு மன்னர்கள் முன்னிலையில் அரங்கேற்றுவார்கள். காலப்போக்கில் தேவதாசிகளாக இருந்தவர்கள் மறைய, அவர்களால் நிழ்த்தப்பட்ட கலையும் மறைந்தது.
தேவதாசி முறை ஒழிப்பு
1930 ஆம் ஆண்டு, முத்துலட்சுமி ரெட்டி இந்தச் சட்ட முன்வரைவை சென்னை சட்டமன்ற மேலவையில் முன்மொழிந்தார். இராஜாஜி இதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், “இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்” என்று வாதிட்டார்.
“பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப்பெண்கள் அந்த புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?” என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.
சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த தேவதாசிகள் இந்தச் சட்டமுன்வரைவை எதிர்த்தனர். தாங்கள் கற்றறிந்த மேட்டுக்குடி கலைஞர்களே அன்றி பால்வினைத் தொழிலாளர்கள் அல்ல என்று அவர்கள் கருதியதே இந்த எதிர்ப்புக்குக் காரணம் ஆகும்.
சட்ட முன்வரைவு ஒப்புதல் பெறுவதில் பெரும் பங்கு வகித்த பெரியார், எதிர்ப்பைக் கருத்திற் கொண்டு, இதனைப் பொதுச் சட்ட முன்வரைவாக அல்லாமல் தனிச்சட்ட முன்வரைவாக நிறைவேற்றுமாறு வழிநடத்தினார்.
சென்னை தேவதாசிச் சட்டம் அதற்குப் பிறகு நிறைவேறிய அதே போன்ற சட்டங்களைப் போன்று கடுமையானது இல்லை. இச்சட்டம் தேவதாசிகளைக் குறித்தது மட்டுமே என்பதால், தென்னிந்தியாவில் பால்வினைத் தொழில் தொடர்ந்தது. குறிப்பாக, ஆகஸ்ட் 14, 1956 அன்று சென்னை தேவதாசி எதிர்ப்புச் சட்டம் நிறைவேறும் வரை, ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் தொடர்ந்தது.
தேவதாசிகளுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் தந்தது. இந்துக் கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்தது.
சென்னை தேவதாசி ஒழிப்புச் சட்டம் என்பது அன்றைய பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களிலும் அதனை அடுத்து விடுதலை பெற்ற இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளிலும் பால்வினைத் தொழிலைச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவித்து நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற சட்டங்களுள் ஒன்று ஆகும்.
1934 பாம்பே தேவதாசி பாதுகாப்புச் சட்டம், 1957 தேவதாசி பாதுகாப்பு (நீட்சி) சட்டம், 1988 ஆந்திரப் பிரதேச தேவதாசிச் சட்டம் ஆகியவை இச்சட்டங்களுள் சிலவாகும்.
தொடரும் தேவதாசி முறை
20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரியவருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட்டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது.
ஏனென்றால் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.
1954 , 55 -ல் பூரி கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் போது 30 -க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர்.
பூரியின் கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்து விட்டனர்.
தேவதாசியாக பொட்டுக்கட்டப்பட்ட பெண் எழுதிய நூல்
1883-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலியுறுத்தி “தாசிகள் மோசவலை” எனும் நாவலை மிகுந்த சிரமத்துக்கிடையில் 1936 -இல் வெளியிட்டார்.
“ஒரு குறிப்பிட்ட பெண் சமூகத்தை விபசாரத்துக்குத் தயார் செய்துவைத்திருப்பது இந்நாட்டு ஆண் சமூகத்தின் மிருக இச்சைக்குதக்க சான்றாக இருக்கிறது. பகுத்தறிவும் நாகரீகமும் வளர்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் தேவதாசி முறையை ஒழிப்பது சாஸ்திர விரோதம், சட்ட விரோதம், கலை விரோதம் என்று கூக்குரல் கிளப்பும் சாஸ்திரிகளும், தலைவர்களும் இருப்பது மானக்கேடாகும். தேவதாசி முறைக்கு அடிப்படையாக இருக்கும் கடவுள், மதம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் ஆகியவைகளை முதலில் ஒழிக்க வேண்டும். இவைகளை ஒழித்து விட்டால் தேவதாசிக் கூட்டம் இருப்பதற்கே நியாயமிருக்காது.” –தாசிகள் மோசவலை.
தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது.
கலைக்காக அர்பணிக்கப்பட்ட பெண்களை உணர்வு மற்றும் உடல் ரீதியாக வன்கொடுமை செய்த தேவதாசிமுறை எந்த வடிவத்திலும் நம் தலைமுறையை சேராமல் இருந்தலே நலம். பெண்களின் வளர்ச்சியும் பாதுகாப்புமே நம் மொத்த நாட்டின் வளர்ச்சி.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொன்றுதான் தீர வேண்டும்.
Comments
Post a Comment