தொல்லியல் (Archeology) என்றால் என்ன?
ஆர்கியாலஜி (Archeology) என்ற கிரேக்கச் சொல்லானது ஆர்க்காயஸ் என்ற மூலம் பெறப்பட்டதாகும். ஆர்க்காயஸ் என்றால் பழமை என்றும், லோகோஸ் என்றால் அறிவியல் என்றும் பொருள் வழங்கப்படுகின்றது.
தொல்லியல் என்பது மனிதன் விட்டுச் சென்ற தொல் எச்சங்களை ஆய்வு செய்து பண்பாட்டை அறிந்து கொள்வது ஆகும்.
மேலும் வரலாற்றின் பழங்காலத்தைப் பற்றி அறிய உதவும் கருவிகள், கல்வெட்டுக்கள், பொருட்கள் பற்றிய ஆய்வு தொல்லியல் எனலாம். அதாவது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும்.
*தொல்லியலின் பிரிவுகள்*
*1.அகழ்வாராய்ச்சி*
மண்ணில் புதைந்து போயிருக்கும் பழங்கால மக்களின் எச்சங்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் நிலத்தை அகழ்ந்து செய்யும் ஆய்வுகளுக்கு அகழ்வாராய்ச்சிகள் என்று பெயர். ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தேர்வு செய்து, அப்பகுதியை படிப்படியாகத் தோண்டி, அங்கு கிடைக்கும் பொருட்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்து விவரங்களைக் கண்டு பிடிப்பது அகழ்வாராய்ச்சியின் வழிமுறையாகும். அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் பொருட்களை கரிம பகுப்பாய்வு (கார்பன் டேட்டிங்) உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தி அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதை கண்டுபிடிப்பது மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
*2, நீரியல் அகழாய்வு*
இது கடல்சார்ந்த ஆய்வு முறையாகும். இதனை அகழ்வாய்வாகவும், நீரியல் ஆய்வாகவும் கூறுவார்கள். நிலத்தில் செய்யப்படும் ஆய்வுகளைப் போலவே, கடலில் செய்யப்படும் ஆய்வுகளும் மிக முக்கியமானவை. தமிழகத்தில் பூம்புகார் ஆய்வு, கடலியல் ஆராய்ச்சியின் மிக முக்கியமான உதாரணமாகும். கடலில் மூழ்கிய ஊர்கள், மக்களின் வாழ்விடங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும் போது நிலத்தில் செய்யப்படும் அகழ்வாராய்ச்சிகளைப் போல பண்டைய மக்களின் சமூக, பண்பாட்டு வரலாற்றை அறிய உதவுகிறது.
*3, கல்வெட்டுகள்*
முற்கால மக்கள் பல வகையான செய்திகளைக் கற்களில் பொறித்து வைத்திருந்தார்கள். உருவம் வரைவதில் துவங்கி, பல்வேறு செய்திகளை எழுத்துகளில் செதுக்கி வைத்திருப்பவை கல்வெட்டுகளாகும். உதாரணமாக மிகப் பழைய கல்வெட்டுகளில் தமிழின் ஆதி எழுத்து வடிவமான தமிழ் பிராமி என அழைக்கப்படும் தமிழி வடிவத்திலும், தொடர்ந்து வட்டெழுத்து வடிவத்திலும் எழுத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
*4, சிற்பங்கள்*
முன்னோர்களின் வாழ்வியலை அறியும் ஆய்வுகளில் சிற்பங்கள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. சிற்பங்கள் பொதுவாக வழிபாட்டுத் தலங்களிலிருந்து அதிக அளவில் பெறப்பட்டுள்ளன. அக்கால மக்களின் வழிபாட்டு முறை, கடவுள்களின் உருவங்கள், வீரர்களின் உருவங்கள் என பல்வேறு தரவுகளை சிற்பங்கள் நமக்குத் தருகின்றன. சிற்பங்களில் கற்சிற்பங்கள், மண்ணில் செய்யப்பட்ட சுதை சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகச்சிற்பங்கள். தந்தச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள் எனப் பல வகையான சிற்பங்கள் காணப்படுகின்றன.
*5, .செப்பேடுகள்*
செம்புத் தகடுகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் செப்பேடுகள் என அழைக்கப் படுகின்றன. முற்காலத்தில் அரசர்கள், ஜமீன்தார்கள் தங்கள் முத்திரையுடன் எழுதிக் கொடுத்த ஆவணங்களில் செப்பேடுகள் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. கோவில்களுக்கான கொடைகள், தனி மனிதர்களிடம் அரசர்கள் அல்லது தலைவர்கள், ஜமீன்தார்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்கள், நிலம், வீடு போன்ற சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் என பலவகையான குறிப்புகள் செப்பேடுகளில் இருந்து கிடைத்துள்ளன.
*6, ஓவியங்கள்*
பழங்கால மக்கள் அவரவர் வாழ்ந்த பகுதிகளில் பலவகையான ஓவியங்களை வரைந்து வைத்துள்ளனர். தொன்மையான பாறைகளிலும், குகைகளிலும் கிடைக்கின்ற ஓவியங்களைப் பாறை ஓவியங்கள் என்று அழைக்கிறார்கள். இவை மிகவும் பழமை யானவையாக இருக்கின்றன. முற்காலத்தில் குகைகளில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. பிற்காலத்தில் மலைகளில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பாறை ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன.
*7, காசுகள்*
சங்ககாலத்தில் இருந்தே தமிழ் மக்கள் பல்வேறு வகையான காசுகளைத் தயாரித்து பயன்படுத்தி இருக்கிறார்கள். காசு, பொன், கழஞ்சு, காணம் போன்ற பல பெயர்களில் புழங்கியிருக்கின்றன. காசுகளில் பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள், ஓவியங்கள் போன்றவற்றையும், அவற்றிலுள்ள எழுத்துகளைக் கொண்டும் பல்வேறு விவரங்களைப் பெற முடிகிறது. சங்ககால மன்னர்களின் காசுகளில் துவங்கி, ஆங்கிலேயர் வெளியிட்ட காசுகள் வரை ஆய்வுகல் மூலம் கிடைத்துள்ளன. மக்கள் சேமித்து வைத்த காசுகள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைக்கின்றன
Comments
Post a Comment