தேனருவி அருகில் உள்ள சன்யாசிபுடவு கல்வெட்டு வாசிப்பதற்கு சற்றே சிரமமுடைய தொல்எழுத்து வடிவமுடையது.
தென்றல் தவழும் தென் பொதிகை மலை அமைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அம்பாசமுத்திரம் அடுத்த அய்யனார் குளம் மற்றும் குற்றாலம் மலைப்பகுதியின் மேற்பகுதியில் என இரு இடங்களில் தமிழி கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன.. இதில் தேனருவி அருகில் உள்ள சன்யாசிபுடவு கல்வெட்டு வாசிப்பதற்கு சற்றே சிரமமுடைய தொல்எழுத்து வடிவமுடையது..
அதே அம்பாசமுத்திரம் அடுத்த அய்யனார் குளம் பொத்தையில் காணப்படும் தமிழி கல்வெட்டுகள் மிகத் தெளிவான எழுத்தமைதியோடும் கற்படுக்கைகளோடும் காணப்படுகின்றன.
ஒரே இடத்தில் 2 கற்படுக்கைகள் மற்றும் தமிழி கல்வெட்டுகள் :
1) ராஜாப் பாறை
2) நிலாப் பாறை
1) ராஜாப் பாறை :
இயற்கையாக அமைந்த குகையின் ஊடே இரண்டு கற்படுக்கைகளை அமைத்து மழை நீர் ஒழுகாதவாறு காடி அமைக்கப்பட்டுள்ளது..
கல்வெட்டு வாசகம் :
பள்ளி செய்வித்தான்
கடிகை (கோ) வின் மகன்
பெருங்கூற்றன்
கடிகைக் அரசனின் மகன் பெருங்கூற்றன் என்பான் இப்பள்ளியை செய்வித்துள்ளான்
இப்பாறையிலேயே திருச்சி பார்த்தியால் தொன்மையான பாறை ஓவியமும் கண்டுபிடிக்கப்பெற்றது..
2) நிலாப்பாறை :
ராஜாப் பாறையின் எதிர்புறம் உள்ள வட்டமான பாறையின் மேற்புறம் பெயருக்கேற்ப நிலவை காணும் படியாகவும் வெயில் மழை பனி என அனைத்தும் நேரடியாக படும்படி அரிதான இரண்டு கற்படுக்கைகள் அமைந்துள்ளன.. இதன்மீது ஏறி பார்க்க வேண்டும் என்றால் மிகவும் சிரமம்.. அருகில் உள்ள செங்குத்தான பாறை விளிம்பில் நின்றவாறே ஏற வேண்டும்..
இதன் அருகிலேயே இக்கற்படுக்கையை ஏற்படுத்தி தந்தவரின் பெயரும் உள்ளது.
கல்வெட்டு :
குணாவின் இளங்கோ
செய்பித பளி
குணாவின் இளங்கோ செய்வித்த பள்ளி என இதன் மூலம் அறிய முடிகிறது.
இவற்றின் காலம் பொ.யு.பி. 2 நூற்றாண்டு
இவைதவிர திருநெல்வேலி நகரின் கிழக்கே உள்ள சீவலப்பேரி அடுத்த மாறுகால் தலை அய்யனார் கோயில் பொத்தையில் தமிழி கல்வெட்டு இடம்பெற்றுள்ளது.
Comments
Post a Comment