கல்வெட்டுகளில் பொங்கல் விழா

கல்தோன்றி மண் தோன்றா காலத்திற்கே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என்பதில் இருந்தே தமிழ் மக்களின் நீண்ட நெடிய வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் கொண்டாடும் திருவிழாவே பொங்கல் பண்டிகையாகும்.
பொங்கல் என்பது உணவின் பெயர். பொங்குதல் என்பதன் வினைப்பெயரே பொங்கல்.
பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல், சமைத்தல், மற்றும் செழித்தல் என என்ற பல பொருள் உண்டு.

பொங்கல் பண்டிகையை தைப்பொங்கல், உழவர் திருநாள், தமிழர் திருநாள், அறுவடை திருநாள், தைத்திருநாள் என்று பல பெயர்களில் அழைக்கிறோம்.
பண்பாட்டின் மக்கள் விழாவாகவே பொங்கல் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கிறது. தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடைய தாகவே பொங்கல், தமிழ் மக்களின் பண்பாடாக மலர்ந்தது. பொங்கல் விழா காலப் போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது. தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை வளமைப் பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உருக் கொண்டது.
தமிழரின் மனிதநேய பண்பாட்டுத் திருவிழா பொங்கல் திருவிழா. உழவர் சமூகத்தின் வளமைத் திருவிழா. பொங்கல் தமிழரின் வாழ்வோடும் வளத்தோடும் செழித்த உயரிய பண்பாட்டின் வெளிப்பாடே பொங்கல். எந்த மத வரையறைக்குள்ளும் அடங்காத வேளாண்மை வாழ்வின் உற்பத்தி சார்ந்த வளமைச் சடங்குகளின் தொகுப்பே பொங்கல். இது தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் ஒரு உன்னத திருநாள். இது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட விவசாய திருநாள்.
தமிழர்கள் உட்பட இந்திய உபகண்ட மக்களின் உணவுத் தேவைகளை நெல்லே அதிகம் பூர்த்தி செய்துள்ளது. நெல்லை, மக்கள் பெரும்போகத்தின் (மானாவாரி) போதே அதிகம் பயிருடுகின்றனர். காரணம் பெரும்பாலும் அவர்களை மழையை எதிர்பார்த்து இப்பயிர் செய்கையை ஆரம்பிப்பதால். இலங்கை மற்றும் தென்னிந்தியா வாழ் தமிழ் மக்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றின் மூலமே அதிக மழை வீழ்ச்சியைப் பெறுவதால் புரட்டாசி தொடங்கி மார்கழி வரையான மாரி காலத்தை உள்ளடக்கி நெல்லினைப் பயிருட்டு ஏறத்தாழ தை மாதத்தில் அறுவடை செய்து கொள்கின்றனர்.

சங்க அரசனுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வரப்புயர என்கின்ற வார்த்தையைச் சொல்லி வாழ்த்தினார் அவ்வையார். வரப்புயர சொல் எப்படி அரசனுடைய உயர்வுக்கு காரணமாக இருக்கும் என்று புலவர்கள் கேட்க, முழுப்பாடலையும் சொன்னார். அது விவசாயத்தை முக்கியத்துவத்தையும் அதை காக்க வேண்டிய அரசாங்கத்தின் கடமையும் எடுத்துக்காட்டுவதாக அந்த பாடல் அமைந்தது.
“வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்”

‘வயலே! நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன் மலர் பூத்த’ - எனப் பாடியுள்ளார். அகநானூற்றுப் பாடலில் நக்கீரர்.

“கள் ஆர் உவகைக் கலிமகிழ் உழவர்
காஞ்சி அம் குறுந்தறி குத்தி, தீம்சுவை
மென்கழைக் கரும்பின் நன் பல மிடைத்து
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி”

என்று நெல்லும் கரும்பும் சுவைத்து மகிழ்ந்த ஊரின் செழுமையை சிறப்பித்துப் பாடியுள்ளார். வருடத்துக்கு எத்தனை நாள்களோ, அத்தனை வகைகள் நெல்லுக்கு இருந்தன என்று பறைசாற்றுகின்றது தமிழ்ப் பழமொழி. இந்த நெல்லை அறுவடை செய்யும் நாள்தான் தைத்திருநாள். அந்த நாளே அறுவடைத்திருநாள் என்றும் போற்றப்படுகின்றது.

இந்த நாளில் தமிழர்களின் இறைவனான சூரியனுக்கு நன்றி செலுத்துவர். ஆற்று ஓரப் பகுதியில் இருக்கும் விவசாய நிலத்தில் வருடத்தில் மூன்று முறை அறுவடை செய்வார்கள், ஆனால் மானாவாரி இடங்களில் மழை பெய்யும் காலங்களில் மட்டுமே விவசாயம் செய்வார்கள். அந்த வகையான நிலங்களில் வருடத்தில் ஆடி மாதத்தில் விதை விதைத்து மார்கழி மாதத்தில் அறுவடை செய்வார்கள். அவ்வாறு அறுவடை செய்த தானியங்களை வைத்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து பூஜை செய்வர்.

உழவர் திருநாள் என்று போற்றப்படும் இந்த பொங்கல் பண்டிகைகள் தமிழகத்தில் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு தினங்கள் கொண்டாடப்படுகிறது.

நெற்பயிர் என்பது சூரிய ஒளியைக் கொண்டு அதன் இலைகளில் உள்ள பச்சையயுருமணிகள் எனும் கலப் புன்னங்கத்ததில் நடக்கும் ஒளித்தொகுப்பு எனும் செயற்பாட்டின் மூலம் சூரிய ஒளிச்சக்தியை இரசாயணசக்தியாக (குளுக்கோஸ் மற்றும் மாப்பொருள்) மாற்றுகிறது. நெல் மணியை அரிசியாக்கி அந்த மாப்பொருளையே நாம் உணவாக்கிக் கொள்கின்றோம். அந்த மாப்பொருளே எமது உடலியக்கத்துக்கு அவசியமான சக்தியின் பிரதான முதலாக உள்ளது.
இதனடிப்படையில்தான் தைத் திங்களில், பயிர் விளைநிலங்களில் நல்ல விளைச்சலைப் பெற்ற மகிழ்ச்சியில் மக்கள் உழவர் திருநாளை புதுத்தானியங்கள் கொண்டு பொங்கலிட்டு சூரியனுக்கு நன்றிசெலுத்தி, உறவுகளுக்கு உணவு பரிமாறி, பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுக்களை நடத்திக் கொண்டாடுகின்றனர்.

தை முதல் நாளை மையமாகக் கொண்டு, வேளாண்மை ஆண்டு தொடங்கப்பட்டு அறுவடைத் திருவிழா கொண்டாடப்பட்டது.
புறநானூற்றுப் பாடலிலும், பரிபாடலிலும் பொங்கல் விழா குறிப்பிடப்படுகிறது.
“ஏற்றுக உலையே! ஆக்குக சோறே'' (புறம் 172)
எனும் புறநானூற்றுப் பாடலின் அடி, பொங்கல் விழாவின் தொடக்க கால நிலையை நினைவு கூர்கிறது.

`பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்' இலட்சியத்தினை வெளிப்படுத்தும் திருவிழாவாகச் சங்க காலத்தில் பொங்கல் விழா சிறப்புற்று விளங்கியது. தங்கள் உழைப்பின் பயனை, அறுவடை செய்து உழவர்கள் வீட்டில் கொண்டு வந்து குவித்தனர்.

புதியதாகக் கொண்டு வந்த செந்நெல்லைப் பொங்கலாக்கிப் பலரோடும் சேர்ந்து பகுத் துண்ணும் திருநாளாக அக்காலத்தில் `பொங்கல் திருநாள்' பொலிவுற்றது. இதனை முந்துவிளையனார் “நாள் புதிது உண்ணும்'' திருநாளாகவே அக்கால அறிஞர்கள் போற்றி உள்ளனர்.

கூடல் மாநகரில், புலவர் பெருமக்கள் பலர் கூடிப் புதிய இலக்கியப் படைப்புகளைச் சுவைத்து மகிழ்ந்ததைப் புலவர் ஒருவர், உழவர் பெருமக்கள் கொண்டாடும் “புதிதுண்ணும் திருவிழாவாக'' உருவகப்படுத்தியுள்ளமை இக்கருத்தைத் தெளிவுறுத்துகிறது.
“செதுமொழி சீத்த செவி செறுவாக
முதுமொழி நீராப் புலனாவுழவா
புதுமொழி கூட்டுண்ணும் புரசைசூழ் நல்லுர்'' (கலித். 68)

நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!
விளைக வயலே! வருக இரவலர்!
பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக!
பசி இல்லாகுக! பிணிசேண் நீங்குக!
வேந்து பகைதணிக! யாண்டுபல நந்துக!
அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!
அரசுமுறை செய்க! களவு இல்லாகுக!
நன்றுபெரிது சிறக்க! தீது இல்லாகுக!
மாரி வாய்க்க! வளநனி சிறக்க!
வாழிய நலனே! வாழிய நிலனே! – (ஐங்குறுநூறு)

இந்தப் பாடலில் பொங்கல் என்று வரவில்லை என்றாலும், பொங்கல் அடையாளங்கள் அனைத்தும் விளங்கி வாழ்த்துக் கூறுவதைக் காண்கிறோம்
பொலி என்ற சொல்லுக்குப் பொருள் செழித்தல், மங்கலமாதல் வளமடைதல் என்பதாகும். பொலியிடுவது என்பது முதியோர் முதல் சிறார் வரை ஒன்று சேர்ந்து `பொலியோ பொலி’ எனக் கூடி ஒலி எழுப்புவது.

இவ்வாறு சங்ககாலத்தில் தொடங்கிய பொங்கல் விழா, காலப் போக்கில் வழிபடு தெய்வங்களுக்குச் செய்யப்படும் சடங்குகளோடு இணையலாயிற்று. பொங்கலைச் செய்து தெய்வங்களுக்குப் படைக்கும் வழக்கமும் தோன்றியது. இதனை,
“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து'' (சிலப். 5:68-69)
எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.
பொங்கல்விழா காலப் போக்கில் பல வளர்ச்சிகளைக் கடந்து வந்துள்ளது.

தமிழகத்தில் வேளாண்மையின் வளர்ச்சியோடும் பேரரசுகளின் வளர்ச்சியோடும் மிகுந்த தொடர்புடையதா கவே, பொங்கல், தமிழ் மக்களின் பண்பாடாக மலர்ந்தது. தமிழகம் முழுவதுமான விவசாயிகளின் ஒற்றுமையை வளமைப்பண்பாட்டை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் திருவிழா உருக்கொண்டது.

தை முதல் நாளை மையமாகக் கொண்டு, வேளாண்மை ஆண்டு தொடங்கப்பட்டு அறுவடைத் திருவிழா கொண்டாடப்பட்டது.

‘தை நீராடல்’
----------------
சங்க இலக்கியங்களில், தை மாதம் முதல் நாள் நோன்பிருந்து நீராடுவதை ‘‘தை நீராடல்” என்று மக்கள் அழைத்தனர். வைகை நதியில் அக் காலத்தில் மக்கள் நதி நீராடியதைப் பற்றிய பல குறிப்புகள் பரிபாடலில் உள்ளன.

“தைஇத்திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு

“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை முதலிய இலக்கியங்களில் தை நீராடல் பற்றிய பல குறிப்புகள் இருக்கின்றன.

தை மாதத்தை சிறப்பித்துக் கூறியதோடல்லாமல் அம்மாதத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பெண்கள் ‘தை நீராடல்’ என்னும் விழாவினை கொண்டாடியுள்ளமையும் காணக் கூடியதாக இருக்கிறது.
பல்லவர்களின் ஆட்சியின் போது, திருமணமாகாத பெண்கள் நாட்டின் விவசாய வளர்ச்சிக்காக நோன்பு இருந்தனர். இந்த நோன்பிற்கு தை நீராடல் அல்லது பாவை நோன்பு என்று பெயர். இது தமிழ் மாதமான மார்கழியில் அனுசரிக்கப்பட்டது. இந்த பண்டிகையின் போது, இளம் பெண்கள் நாட்டில் மழை வேண்டியும் மற்றும் விவசாயம் செழிப்புக்காக பிரார்த்தனை செய்தனர். மாதம் முழுவதும், அவர்கள் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்த்தனர். அவர்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவ மாட்டார்கள், பேசும்போது கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தனர்.

தை மாதத்தில் பாவை செய்து நீராடி வழிபடுவதே தை நீராடல் விழா. இதில் வழிபடப்படும் பாவை மண்ணால் செய்யப்படுவது. மண் என்பது நிலத்திற்கான குறியீடு. உற்பத்திக்கு ஆதாரமாகி வாழ்வளிக்கும் நிலத்தை வழிபடுவதே இவ்விழாவின் நோக்கம். பெண்கள் அதிகாலையில் நீராடினர். ஈரமணலில் செய்யப்பட்ட காத்யாயனி தேவியின் சிலையை வழிபட்டனர். தை மாதம் முதல் நாள் அவர்கள் பாவை நோன்பை முடித்தனர். இவ்விழாவில் பறை இசைத்து ஆடப்படும் குரவைக்கூத்து, வள்ளைக்கூத்து, உலக்கை இடித்து ஆடும் ஆட்டம் போன்றவை இடம் பெற்றன. இதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன.
“தைஇ நின்ற தண்பெயல் கடைநாள்
வண்டற் பாவைஉணர்ந்துறைத் தரீஇத்
திருநுதற் மகளில் குரவை அயரும்’’ (அகம்., பா.எ., 269)

அதாவது தைத் திங்களிலே குளிர்ந்த பெயலின் கடைப்பட்ட நாட்களிலே பொன்னாலாகிய காசுகளைத் தொடுத்து அணிந்த வண்டல் விளையாட்டிற்கு உரிய பாவையை அழகிய நெற்றியினையுடைய மகளிர், நீர் உண்ணும் துறையிலே கொண்டு வந்து வைப்பர். அப்போது அவர்கள் குரவைக் கூத்து ஆடுவர். இக் காலப் பகுதியிலே பெண்கள் பாவை நோன்பு என்னும் விரதத்தை கடைப்பிடித்ததும் எவ்வாறு என, மேற்கூறப்பட்டுள்ள புறநானுறுப் பாடல் வரிகளான “…தைஇத் திங்கள் ….” என்ற வரிகளில் தைமாத முழு நிலவு நாளே அவர்களது விரதம் முடித்து நுகர்ச்சி கொள்வதற்குரிய உகந்த நாளாகக் கூறப்படுள்ளது. அதாவது தைப்பூச நாள். பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப்பூசம்.

புதுநெல்லை அரிசியாக்கி தைப்பூசம் அன்றுதான் சமைப்பார்கள். அதைப் பொங்கலாகச் சமைப்பது பழைய மரபு. பொங்கலைத் தமிழில் நெய்ப் புழுக்கல் என்று சொல்வோம். நெய்யுடன் பாலோடு அமுதை சமைத்து அதனைத் தைப்பூச நாளன்று இறைவனுக்குப் படைத்து உண்பார்கள். இலங்கையில் 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சரஜதிமாலை என்ற தமிழ் நூலில் தை முதல் அறுவடைத் திருநாளாகவும், தைப்பூச நாளை நெய்யோடு புத்தரிசி பொங்கலைப் படைத்து வழிபாடு நடத்தும் நாளாகவும் குறிப்பிடுகிறார்கள். 15 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் பழைய மரபு மாறியிருக்கிறது.

பிறகு கதிர்களைக் குஞ்சமாக வைக்கோல் பிரியால் கட்டி வீட்டின் முன்பகுதியில் தொங்கவிடுவார்கள். அன்று தொடங்கி அந்த ஆண்டு முழுவதும் சிட்டுக்குருவிகளுக்கு அந்தக் கதிர்கள் உணவாகப் பயன்படும். தாங்கள் மட்டும் உண்பதோடு மட்டுமல்லாமல், அறுவடை நாளில் கொண்டுவருகிற கதிர்களைப் பறவை இனங்களுக்குக் கொண்டுவருகிற மரபு இருந்திருக்கிறது.

பொங்கல் என்ற பெயரே மிகவும் பிற்காலத்தில்தான் வந்திருக்கிறது. தை நீராடல் என்ற நடைமுறைதான் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரக் கணத்துடன் சேர்ந்து முழுநிலவு சஞ்சரிக்க நேர்கிற நாளே அந்த மாதத்தின் பெளர்ணமி தினமாகும். எனவே, அந்த மாதத்தை அக்குறிப்பிட்ட நட்சத்திரக் கணத்தின் பெயரால் அழைத்தனர். எடுத்துக்காட்டாகத் துலா ராசியில் இடம்பெறுகின்ற சித்திரை நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து வானில் முழுமதி திகழ்கின்ற நாளை அடிப்படையாகக் கொண்டு, அம்மாதம் சித்திரை மாதமென வழங்கப்பட்டது. அதுபோன்றே புஷ்யம் (பூசம்) அல்லது திஷ்ய நட்சத்திரக் கூட்டம் வானில் சஞ்சரிக்கின்ற நாளில் அந்நட்சத்திரக் கூட்டத்துடன் சேர்ந்து முழுமதியும் சஞ்சரிக்கின்ற மாதம் பெளஷ்ய மாதம் அல்லது தைஷ்ய மாதம் எனப்பட்டது. தைஷ்ய மாதம் என்பதே தைஇய திங்கள் என்றும், தைஇத் திங்கள் என்றும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூச நட்சத்திரக் கணம் என்பது கடக ராசியில் இடம்பெறும் நட்சத்திரத் தொகுதியாகும். இத்தொகுதியில் மூன்று நட்சத்திரங்கள் அடங்கும். கிரேக்க மொழியில் அமைந்த வானநூல் குறிப்புகளில் இக்குழு Delta, Cancri எனப்படும். கடக ராசியிலிருந்து ஏழாவது ராசியாகிய மகர ராசியில் சூரியன் நின்று, மகர ராசியிலிருந்து 180 பாகைகள் தொலைவில் அமைந்துள்ள கடக ராசியில் இடம்பெற்றுள்ள திஷ்ய நட்சத்திரக் கூட்டத்துடன் நிலவு சஞ்சரிக்கிறபோது அந்நிலவினை நேரெதிர்ப் பார்வையால் பார்க்கின்ற நாளே தை மாத முழுநிலவு நாளாதலால் அந்நாளினை மகர ஞாயிற்றுப் பெளர்ணமி என்றும் குறிப்பிடுவதுண்டு. இது சூரியனை அடிப்படையாகக்கொண்ட செளரமானக் கணிதம் ஆகும். செளரமானக் கணிதத்தைவிட நிலவினையும் நட்சத்திரக்கணங்களையும் அடிப்படையாகக்கொண்ட சாந்திரமானக் கணிதமே பழமையானதாகும்.
புஷ்யம் அல்லது திஷ்ய நட்சத்திரத்துடன் முழுநிலவு சஞ்சரிக்கின்ற நாளில் ஆறுகளிலோ, குளங்களிலோ நீராடுவதென்பது புஷ்யஸ்நானம் அல்லது திஷ்யஸ்நானம் எனக் குறிப்பிடப்படும். இதுவே தைந்நீராடல் ஆகும். 12 மாதங்களிலும் திஷ்ய நட்சத்திரத்துடன் நிலவின் தேய்பிறைத் திதியோ, வளர்பிறைத் திதியோ ஏதாகிலும் ஒரு திதி நிகழ்கிற நாளில் நீராடுதல் ஒரு விசேடச் சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டதென்றாலும், ஆண்டுக்கொரு முறை வருகிற முழுநிலவு நாளாகிய தைப்பூச நாளில் அவ்வாறு நீராடுவது மிகுந்த சிறப்புடன் கடைப்பிடிக்கப்பட்டது என்று தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக, முழுமதியுடன் ஒரு மாதம் முடிவடைவதாகக் கணக்கிடப்பட்ட பூர்ணிமாந்தக் காலக் கணக்கீட்டினைப் பின்பற்றிய சமூகத்தவரிடையே மார்கழி மாத இறுதி நாளான மிருகஸ்ரீஷம் / மிருகசீரிஷம் நட்சத்திர நாளிலோ ஆதிரை நட்சத்திர நாளிலோ விரதம் தொடங்கி 30 நாள்கள் விரதம் கடைப்பிடித்து விரதத்தின் இறுதி நாளாக வருகிற தைமாத இறுதி நாளான தைப்பூச நாளில் நீராடி விரதத்தை முடிப்பதென்பது மிகுந்த சிறப்புடைய ஒரு சடங்காகக் கடைப்பிடிக்கப்பட்டது. குறிப்பாகப் பெண்டிர் இவ்விரதத்தை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டனர் என அறிய முடிகிறது. பன்னிரு ராசிகளுள் நிலவின் ஆட்சி பெற்ற ராசி கடக ராசியாகும். கடக ராசியின் முதன்மையான நட்சத்திரக் கூட்டமாகிய திஷ்ய நட்சத்திரக் கூட்டத்தில் முழுமதி அமைகிற நாள் நிலவின் அதிகபட்சமான ஆற்றலை வழங்குகிற ஒரு நாளாகக் கருதப்பட்டதில் வியப்பில்லை. நிலவு நீரை ஆட்சி செய்கின்ற கோளாகவும், கடக (நண்டு) ராசி ஒரு நீர் ராசியாகவும் கருதப்படுவதால் திஷ்ய நட்சத்திர முழுமதி நாளில் மகளிர் நீராடல் சடங்கு நிகழ்த்துவது, அவர்களின் மனநலனுக்கும், குடும்ப நலன்களுக்கும் உகந்ததாகக் கருதப்பட்டது. திஷ்ய நட்சத்திர கணம் நீர்வளம், பயிர்வளம் ஆகியவற்றுடன் (அவற்றின் மூலமாகக் கன்று காலிகளின் பால் வளத்துடனும்) தொடர்புடையதாகக் கருதப்பட்டமையால் புஷ்யஸ்நானம் அல்லது தைந்நீராடல் என்பது செல்வச் செழிப்பின் உருவகமான குபேர வழிபாட்டு மரபில் முதன்மையான ஒரு நோன்பாக மேற்கொள்ளப்பட்டது.

பழமையான தர்மசூத்திர நூல்களுள் ஒன்றாகிய ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தில் (II: 8:20:3-9; 10-22) புஷ்யவிரதம் என்ற பெயரில் இந்நோன்பு குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, உத்தராயனத்தில் சுக்லபட்சத்தில் ஓரிரவு விரதமிருந்து ஸ்தாலிபாகம் (தேன் கலந்த பாற்சோறு) சமைத்துக் குபேரனுக்குப் படைக்க வேண்டும் என்று குறிப்பு காணப்படுகிறது. ஹரிவம்சம் போன்ற பல நூல்களில் புஷ்யஸ்நானம் மிகவும் உயர்ந்த சாந்திச் சடங்காகக் குறிப்பிடப்படுகிறது.

உத்தராயனத்தில் (சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வுக் காலத்தில்) சுக்லபட்சத்தில் (வளர்பிறையில்) கடைப்பிடிக்கப்படும் புஷ்யவிரதம் என்பது தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை எந்த மாதத்திலும் வளர்பிறைக் காலத்தில் கடைப்பிடிக்கத்தக்கதே எனினும், தை மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் புஷ்யவிரதம் என்பது முழுநிலவுவுக்கு முதல் நாளில் அனுசரித்து மறுநாளில் விரதம் முடிக்கின்ற நாளாகக் கொள்வதற்கு உகந்ததாதலால் சிறப்பானதாகும். இவ்விரதத்துடன் குபேரனை ஆபஸ்தம்ப சூத்திரம் தொடர்புபடுத்துவது குறிப்பிடத்தக்கது.

சரத்கால விரதம் என்பது மார்கழி மாதம் தொடங்கிப் பங்குனி மாதம் வரை நீடிக்கும். இதில் முதன்மையானது தைந்நீராடல் விரதம் ஆகும். அடுத்தது மாசி மாத சுக்லபட்சப் பஞ்சமி தொடங்கிப் பெளர்ணமி (மாசிமகம்)யுடன் முடிவடையும் சாரதா நவராத்திரி அல்லது சரஸ்வதி நோன்பு ஆகும். இவ்விரு மாதங்களுடன் பங்குனி மாதத்திலும் நோன்பிருந்து பங்குனி உத்தரத்துடன் காமவேள் நோன்பு முடிவடைவதாக திவ்யப் பிரபந்தம் (நாச்சியார் திருமொழி) குறிப்பிடுகிறது. இந்நோன்புகளுள் தைந்நீராடலே ‘தவத் தைந்நீராடுதல்’, ‘தையில் நீராடிய தவம்’ எனச் சங்கஇலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது. சரத்காலம் முழுமையுமே தவத்துக்குரிய காலமாகக் கருதப்பட்டது.

சரத்காலம் முடிந்து இளவேனிற்பருவம் தொடங்கிச் செடி, கொடிகள், மரங்கள் அனைத்தும் மலர்கள் மலர்ந்து, வண்டுகள் சூழச் செழிப்புடன் காட்சியளிப்பதைக் குறிப்பிடும் கலித்தொகைப் புலவன், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தவம் செய்தவர்கள், அத்தவத்தின் பயனைப் பெற்று அனுபவிப்பதை அதற்கு உவமையாகக் குறிப்பிடுகின்றான்.

(கலித்தொகை 30:1-4.)
மழைக்காலம் முடிந்தபின்னர் வருகின்ற சரத் (பனிக்) காலத்தில் மேகங்களற்ற வானத்தில் தோன்றுகின்ற முழுநிலவு சரத் சந்திரன் எனப் போற்றப்பட்டது. சரஸ், சரத் என்ற சொற்கள் குளம் என்ற பொருளுடையவை.

சரத்சந்திரன், அலைகளற்ற குளத்தில் பிரதிபலிக்கின்ற முழுநிலவே போன்று மனதை மயக்கக்கூடிய தோற்றம் கொண்டதாகும். வடகிழக்குப் பருவக்காற்றால் நேர்கின்ற மழை ஆவணி மாதம் தொடங்கி நான்கு மாதங்கள் நீடித்துக் கார்த்திகை மாதத்துடன் முடிவடையும். அதன் பின்னர், மார்கழி மாதத்திலிருந்து பங்குனி வரை நீடிக்கும் காலம் சரத் காலம் ஆகும். இந்நான்கு மாதங்களையுமே பனிக்காலம் எனத் தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க பரிபாடலில் (பா. 11) சரத்கால முழுநிலவு பின்வருமாறு வருணிக்கப்படுகிறது:
“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
மாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை”

மாரிக் காலத்துக்குப் பின்னர் வருகின்ற சரத் சந்திரன் குளத்துத் திங்கள் என இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
இவ்வாறிருப்பினும், பெண்டிர் தவம் செய்து முடித்தபின் தவத்தின் பயனை நுகரும் நாளாகத் தைப்பூச நாளே சங்க இலக்கியங்களில் முதன்மைப்படுத்தப்படுகிறது. தைப்பூச நாளில் இயற்கையாகவே நிலத்தில் நீர் ஊறும் என்று நம்பப்பட்டது.
தைந்நீராடல் மரபு என்பது ‘புஷ்ய ஸ்நானம்’ எனத் தர்மசூத்ர நூல்கள் குறிப்பிடும் விரதமே என்றும், வருணன், குபேரன், ஐயனார் வழிபாடுகளுடன் தொடர்புடைய விரதமே என்றும் தெளிவாகத் தெரியவருகின்றன. குறிப்பாகத் திஷ்யம், திஸ்ஸம், தைஇய என்ற வழக்குகள் வருணன் வழிபாட்டுடன் தொடர்புடைய இயக்கர் குல அல்லது இலங்கைப் பூர்வகுடி மரபினரின் வழக்குகளாக இருந்து இந்தியச் சிந்தனை மரபில் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இயக்கர்கோன் வழிபாடு அதாவது, யக்ஷர் குல வருணன் - சோமன் வழிபாட்டுத் தொடர்பிலேயே தைந்நீராடல் மரபு சங்க காலத் தமிழகத்தில் நிலவியிருக்க வேண்டும்.
சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர். தை என்ற சொல், திஷ்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது. திஷ்யம் என்றால் பூச நட்சத்திரம். திஷ்யம்-தைஷ்யம்- தைசம்-தை என, மாற்றம் கொண்டது. தைசம் என்றால் பூச நட்சத்திரம் என, கதிரைவேற்பிள்ளையின் சங்கத்து அகராதி கூறுகிறது. பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம். அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான், தை மாதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. சங்க இலக்கியங்களில், 'தைஇயத் திங்கள்' என, தை மாதம் குறிப்பிடப்படுகிறது. தைசப்பூசத்தன்று, முழுநிலா நாளில், நிலத்தில் நீர் ஊறும் என்பது சங்க கால மக்கள் நம்பிக்கை. புஷ்யம் என்ற சொல்லுக்கு புஷ்டி என்று அர்த்தம். அந்த அடிப்படையில், தையில் நீர் வளம் பெருகி, உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமாக இருக்க வேண்டும் என, நோற்பது தான் தைந்நீராடல். பூர்ணிமாந்த கணக்கின்படி, மார்கழிப் பவுர்ணமியில் விரதத்தை துவக்கி, தை பவுர்ணமியில் அதாவது தைசப் பூசத்தன்று முடிப்பது தைந்நீராடல். சங்க இலக்கியம் இதனை 'தவத் தைந்நீராடல்' என, குறிப்பிடுகிறது. இந்த விரதத்தை பெண்கள் தான் இருப்பர். பக்தி இயக்க காலகட்டத்தில், சைவமும், வைணவமும் இதை தத்தமக்கு ஏற்ப மாற்றிக் கொண்டன.

Comments

Popular posts from this blog

அம்பாசமுத்திரம் -சேர மன்னர் காலக் கல்வெட்டை கண்டுபிடித்த மாணவி‌

தேவதாசி என்றால் கோவிலில் இறைபணிபுரியும் பெண்கள் என்பதே பொருள்.

ஸ்ரேணிபாலா என்பது வணிகக் குழுவினை பாதுகாத்த வீரர்கள் ஆவார்கள்.