வேட்டையாடிப் பெண்கள்
பெண்கள் வேட்டையாடுவது போல் உள்ள வில் அம்புடன் கூடிய பெண்களின் சிற்பங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக காணக் கிடைக்கின்றன.பண்டைய சமுதாயத்தில் ஆண்கள் வேட்டையாடி உணவுப் பொருளைக் கொண்டு வருவார்கள் என்றும், பெண்கள் ஒரு இடத்தில் தங்கியிருந்து உணவைச் சமைத்து கொடுப்பார்கள் என்றும் பொதுவாகச் சொல்லப்படுகின்றது. இந்தப் பொது சிந்தனையை மாற்றி அமைக்கும் வகையில் அண்மைய ஒரு தொல்லியல் கண்டுபிடிப்பு திகழ்கிறது.பெரு நாட்டின் ஆண்டியன் மலைப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட ஒரு அகழாய்வில் 9000 ஆண்டுகள் பழமையானது என அறியபப்ட்ட ஒரு எலும்புக்கூட்டினை ஆய்வாளர்கள் கண்டெடுத்தனர். ஒரு வேட்டைக்காரருக்கு உருவாக்கப்பட்ட ஒரு ஈமக்கிரியை பகுதி அது. அந்த எலும்புக்கூட்டின் அருகில் இருந்த வேட்டைக்கருவிகளை ஆராய்ந்த போது இது மிகத் திறமை வாய்ந்த ஒரு வேட்டைக்க்காரரது உடமையாக இருக்கும் என்று கருதினர்.
வேட்டைக்கருவியோடு இணைந்து கிடைத்த 20 கருவிகளும் ஒரு தேர்ந்த வேட்டைக்காரரின் படைப்பு என்று கருதினர். நிச்சயமாக இந்த வேட்டைக்காரர் ஒரு முக்கிய வேட்டைக்குழுவின் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் கருதினார். அதன் பின்னர் எலும்புக்கூட்டின் மேல் அரிசோனா பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பட்ட வேதியல் சோதனைகளில் இந்த வேட்டைக்காரர் ஒரு பெண் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்சமயம் அந்த வேட்டைக்காரர் ஒரு பெண்தான் என்பதை உறுதி செய்திருக்கின்றனர். இதுவரை வேட்டையாடி சமூகம் என்பது ஆண்களே என்ற பொதுச் சிந்தனையை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றியிருக்கின்றது. இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தென்னமெரிக்காவில் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அவர்கள் மேலும் 10 பெண் வேட்டைக்காரர்களின் எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவர்களது அருகாமையிலேயே அவர்களது வேட்டைக்கருவிகளும் மரியாதை நிமித்தம் வைத்து புதைக்கப்பட்ட செய்தியையும் இந்தக் கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது. இது பற்றி கருத்து கூறும் போது, இதன் வழி பண்டைய காலத்தில், பெண்கள் வேட்டையாடிகளாக தொன்று தொட்டே இருந்திருக்கின்றனர் என்பதையும் உறுதி செய்யலாம் என ஒக்லஹாமா பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் போனி பிட்பிளாடோ தெரிவிக்கின்றார்.பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் 13,000 அடி உயரத்தில் இந்த வேட்டையாடி மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். ஆண்களும் பெண்களும் இணைந்தே தங்கள் உணவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அவர்களில் ஒரு பெண் அக்குழுவின் தலைவியாகவும் இருந்திருக்கலாம். பல பெண் வேட்டைக்குழு தலைவர்களும் இருந்திருக்கலாம். இப்படி பல ஊகங்களுக்கும் தொடர் ஆய்வுகளுக்கும் இட்டுச் செல்லும் கண்டுபிடிப்பாகவே இது அமைகிறது.நமது சமூகத்தில் இருப்பது போன்றே, பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட தனி வேலைகள், தற்போதைய வேட்டுவக்குடியிலும் காணப்படுவதால், பெண்கள் உணவு சேகரிப்பாளராக மட்டுமே இருந்துள்ளனர் என நாம் இதுவரை கருதிவந்துள்ளோம். எனவே இயற்கையாகவே பெண்கள் ஆண்கள் செய்த வேலைகளைச் செய்யவில்லை என்ற தவறானக் கருத்து நிலவியது. ஆனால் இந்த ஆய்வின் மூலம் வேலைகளில் ஆண் பெண் பாகுபாடு அமெரிக்காவில் வாழ்ந்த வேட்டைக்குடியில் இருந்ததில்லை என அறியமுடிகிறது.மேலும், 107 இடங்களை ஆய்வு செய்ததில் 429 உடல்கள் கிடைத்துள்ளன, அதில் 27 பேர் வேட்டையாடிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு கிடைத்த புதைபொருட்களைக் கொண்டு அவர்கள் பெரும் விலங்குகளை வேட்டையாடும் திறனுள்ளவர்களாக இருந்துள்ளனர். அவற்றில் 11 பேர் பெண்கள், அதாவது சுமார் 30%-50% பெண்கள் வேட்டையாடிகளாக இருந்திருக்கலாம், என மேலும் நடந்த பல ஆய்வுகள் கூறுகின்றன.மேலும் அப்பெண்கள், ஆடைகளை உடுத்தியிருந்தனர் என்றும், அதில் Red Ocher சிவப்பு நிரமிகளைக் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது எனவும், இது அந்த ஆடைக்கு நீர்ப்புகாத் தன்மையை அளித்து, ஆடையைப் பாதுகாத்ததாக கூறப்படுகிறது.இதன் மூலம் அமெரிக்கக் கண்டத்திலிருந்த வேட்டையாடி சமூகத்தில், வேலைகளைப் பொருத்தமட்டில் எந்தவொரு பாலின வேறுபாடும் இன்றி இருந்துள்ளமை நமக்குப் புலனாகிறது.பெண்கள் வேட்டையாடுவது போல் உள்ள வில் அம்புடன் கூடிய பெண்களின் சிற்பங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக காணக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சிற்பங்களைக் காண "Sculpture Culture அற்புத சிற்பங்கள்"என்ற எனது முகநூல் பக்கத்தில் " BOW & ARROW ARCHERS IN SCULPTURES சிற்பங்களில் வில்அம்புவில்லாளர்", "WAR FRONT / WARFARE SCULPTURES", "WOMAN WARRIORS IN SCULPTURES"என்ற ஆல்பங்களை பார்வையிடவும்.
Comments
Post a Comment