சுந்தரபாண்டியன் ஆண்ட "விந்தன் கோட்டை"
தென்காசிக்கு அருகில் உள்ள இயற்கை அழகு சூழ்ந்த ஊர் சுந்தரபாண்டியபுரம். சுந்தரபாண்டியன் என்ற அரசர் இப்பகுதியை ஆண்டதால் இவ்வூருக்கு இப்பெயர் வந்தது என்று நம்பப்படுகிறது. சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து ஆய்க்குடி என்ற ஊருக்குச் செல்லும் பாதையில் உள்ளது ‘விந்தன் கோட்டை’ என்ற குக்கிராமம். இங்கு சுமார் ஐம்பது தலைக்கட்டுகளே உள்ளன.
விந்தன் கோட்டையைச் சேர்ந்த மாடக்கண்ணு எனும் பெரியவரிடம் ‘தாத்தா ஏன் உங்கள் ஊருக்கு விந்தன் கோட்டை என்ற பெயர் வந்தது? என்று கேட்டேன், ‘தம்பி, இது சுந்தரபாண்டியன் கோட்டை கட்டி ஆண்ட பகுதியாகும். என்னோடு வாருங்கள் கோட்டை கொத்தளங்கள் இருந்த இடங்களைக் காட்டுகிறேன்’ என்றார்.
நான் பெரியவரின் பின்னால் சென்றேன். பெரியவர், முதலில் என்னை விந்தன் கோட்டை இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். இப்போது விந்தன் கோட்டை என்ற பெயரில் இருக்கும் ஊருக்கு கிழக்கே சுமார் நாலு பர்லாங் தூரத்தில் பாழடைந்த பழைய கால கோட்டை இருந்த இடம் உள்ளது. பழைய கோட்டையின் நினைவாகத்தான் இன்று அக்குக்கிராமத்திற்கு அப்பெயர் வைத்துள்ளனர்.
அரண்மனையைச் சுற்றிலும் நான்கு புறமும் கோட்டைச் சுவர்கள் இருந்த பகுதி இப்போதும் மேடான பகுதியாகக் காணப்படுகிறது. கோட்டையின் மேல்புறத்தில் மேல்கோட்டை மாடன்சாமி சிலையும், கோட்டையின் கீழ்ப்புறத்தில் கீழ்க்கோட்டை மாடன்சாமி சிலையும் இன்றும் உள்ளது. சரியாக கோட்டையின் நடுப்பகுதியில் நடுக்கோட்டைமாடன் சாமி சிலை உள்ளது.
நடுக்கோட்டை மாடன் சாமிக்கு வடக்குப் பகுதியில் பெரிய பெருமாள் கோயில் உள்ளது. அரச வம்சத்தினர் வழிபட்டதற்கான சகலவிதமான அடையாளங்களோடும் அக்கோயில் உள்ளது. பெருமாள் கோயிலின் மேல்பகுதியில் ஒரு தெப்பக்குளம் இருந்திருக்கின்றது. இப்பொழுது அந்த தெப்பக்குளம் நெல் விளையும் நன்செய் நிலமாக மாற்றப்பட்டுள்ளது என்றாலும், தெப்பக்குளம் இருந்ததற்கு அடையாளமாக அந்த வயல் மட்டும் ‘பள்ளக்காலாக’ உள்ளது. பக்கத்தில், குளக்கரையின் படிக்கட்டுக் கற்கள் காணப்படுகின்றன.
கோயிலின் வடபகுதியில் இடிபாடுகளுடன் கூடிய கட்டடம் ஒன்று உள்ளது. ‘இந்த இடத்தில் என்ன கட்டடம் இருந்த்து?’ என்று பெரியவரிடம் கேட்டேன். ‘இது குதிரை லாயம் இருந்த இடம். ராஜா அரண்மனையிலிருந்து கோயிலுக்கு சாமி தரிசனம் பண்ண குதிரையில்தான் வருவார். கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வரும்வரை குதிரையை இந்த இடத்தில்தான் கட்டி விட்டுச் செல்வார்’ என்று விளக்கம் கூறிய பெரியவர், கோயிலின் வடமேற்குப் பகுதியில் உள்ள தாழ்வான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு இடிபாடுகளுடன் கிடக்கும் பகுதியைக் காண்பித்து ‘இது கோயில் நந்தவனம் இருந்த பகுதி. இங்கு ஒரு கிணறும், கிணற்று நீரை இறைக்க ஒரு ஏற்றமும் இருந்திருக்கிறது.
ஏற்றம் போடப் பயன்பட்ட கல் இந்த இடத்தில் கிடந்தது, தற்போது அக்கல் தூணை உடைத்து வீடு கட்ட கல்லாகக் கொண்டுபோய் விட்டார்கள். கோயில் நந்தவனம் இருந்த பகுதி இன்று நெல்விளையும் நன்செய் நிலமாகிவிட்டது. ஆனால் தூர்ந்து போன நிலையில் இடிபாடுகளுடன் அந்தக் கிணறு மட்டும் அதோ தெரிகிறது’ என்று ஒவ்வொரு இடமாகக் காட்டி எனக்கு விளக்கம் கூறினார் பெரியவர்.
கோயிலை அடுத்து சற்று தொலைவில் ஒரு குளம் உள்ளது. குளத்தின் கரையில் உள்ள ஒத்தையடிப்பாதை வழியாக என்னை அழைத்துச் சென்று ஒத்தைப்பனை மரமும், செவிட்டு அவிரிச் செடிகளும் உள்ள ஓர் இடத்தில் இருக்கும் செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு மண்டபத்தின் பகுதியைக் காட்டினார் பெரியவர், ஒரு மண்டபத்தின் பெரும் பகுதி பூமியில் மூழ்கிவிட, பூமிக்கு மேலே ஒரு சிறு பகுதி மட்டும் தெரிகிறது. பழங்கால செங்கல்லாலும், சுண்ணாம்புக் காரையாலும் கட்டப்பட்ட கட்டடம் என்பது மட்டும் பார்த்த பார்வையிலேயே தெரிகிறது. அந்தக் கட்டடத்தின் பெயர் ‘பணப்பட்டறை’ என்று சொன்ன பெரியவர், இது அந்தக் காலத்தில் ராஜா பொற்காசுகளையும், தங்க, வைர நகைகளையும் சேகரித்து வைத்திருந்த இடம். அதனால்தான் அதை ‘பணப்பட்டறை’ என்று சொல்லி இருக்கிறார்கள். ‘இந்தக் கட்டடத்தை உடைத்துப் பார்க்க பலபேர் வந்து தோண்டிப் பார்த்து தெய்வக்குற்றம் வந்து கண் தெரியாமல் போய் விட்டார்கள்’ என்று எங்கள் ஊர்ப் பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று கூறிய பெரியவர், அடுத்து கோட்டையின் வட எல்லைக்கு அழைத்துச் சென்றார். வட எல்லை கோட்டைச் சுவர் வாசலின் ஓரமாக நட்டு வைக்கப்பட்டுள்ளது ஒரு நடுகல். இன்றைக்கு அந்த நடுகல் பெரிய குளத்து மறுகால் ஓரமாய் இருக்கிறது.
நடுகல்லின் முன்னும், பின்னும் ஒரு வீரனின் உருவம். தெளிவில்லாமல் செதுக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு அடி உயரத்திற்கு உள்ள அந்த நடுகல்லின் கீழ்ப்பகுதி மண்ணால் மூடப்பட்டுள்ளது, ஒரு காலத்தில் தெளிவான உருவாகச் செதுக்கப்பட்டிருந்த அந்த வீரனின் உருவம் கால மாற்றத்தால், பராமரிப்பு இன்மையால் இந்த நிலையை அடைந்திருக்கலாம்.
அதன் பிறகு பெரிய குளத்தின் கீழ்க்கரையின் நடுவில் பாதி புதைந்த நிலையில் உள்ள ‘சப்த கன்னிகளின் சிலை உள்ள பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். பெரியவர் ஏழு கன்னிப் பெண்களின் சிலையும் ஒன்றோடு ஒன்று இணைந்து பின்னப்பட்ட நிலையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. சப்த கன்னியர்கள் இன்றும் குறுந்தெய்வமாக இப்பகுதி மக்களால் வணங்கப்படுகின்றனர்.
அதன் பிறகு கீழ்க்கோட்டைச் சுவருக்குப் பக்கத்தில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு சற்று பள்ளமாக உள்ள ஒரு இடத்தைக் காட்டி,
‘தம்பி, இங்கிருந்து இரண்டு சுரங்கப்பாதைகள் கிழக்கும் மேற்குமாகச் செல்கின்றன. அதில் கிழக்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை ஊத்துமலை ஜமீன்தாரின் அரண்மனைக்கும், மேற்கு நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதை தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் செல்கிறது’ என்று என் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
பள்ளமான அந்தப் பகுதியைப் பார்த்தால் அது ஒரு சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் போன்றுதான் தெரிகிறது. மழைக்காலத்தில் சுனை போல் அதில் தண்ணீர் தேங்கி நிற்கும் என்றும் கூறினார் பெரியவர்.
பெரியவர் காட்டிய இடங்களைப் பார்த்த பிறகு கூறிய விளக்கங்களைக் கேட்ட பிறகு எனக்கும் அந்த இடத்தில் ஒரு காலத்தில் அரண்மனையும், அரண்மனையைச் சுற்றிய கோட்டைச் சுவர்களும் இருந்திருக்கலாம் என்று நம்பத் தோன்றுகிறது.
கோட்டையைக் காவல் காக்க அரசர்கள் காலத்தில் நிறுவப்பட்ட எல்லை தெய்வங்களும், அச்சிறு தெய்வங்களின் பெயர்களும் (மேல் கோட்டை மாடன், நடுக்கோட்டை மாடன், கீழ்க்கோட்டை மாடன்) நடுக்கல்லும் (பல நடுகற்கள் இருந்து அவை பூமியில் புதைந்து கிடக்கலாம்) இன்றும் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் கோபுரத்துடன் கூடிய பெருமாள கோயிலும், சப்த கன்னியரின் சிலையும், ‘விந்தன் கோட்டை’ என்ற ஊர்ப்பெயரும் அக்கம்பக்கத்து கிராமத்து மக்கள் சொல்லும் தகவல்களும்தான் இன்று நமக்கு ஆதாரங்களாக எஞ்சியுள்ளன.
பணப்பட்டறையை பூதம் காக்கிறது என்ற பின்னணியில் உள்ள கதைகளும், நந்தவனக் கிணற்றுக்குள் தங்கப்புதையல் இருக்கிறது என்ற பின்னணியில் உள்ள கதைகளும் சப்த கன்னியர்களின் சிலைகள் ஏன் அந்தக் குளத்தின் கரையில் அமைக்கப்பட்டது என்பதற்குப் பின்னால் உள்ள சொல் கதைகளும், நம்மை வேறொரு உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன.
It's wonderful information bro
ReplyDelete