ஒரு படையுடன் வணிகம் செய்யும் வணிகர்களுக்கும் போர்க் கலையை கற்க தேவை இருந்தது. எனவே அவர்கள் வீர வணிகர் ஆயினர்.
உள்நாட்டிலேயே வணிகம் பார்க்கும், நிலை வணிகர்களுக்கு அரசரின் உள்நாட்டு காவலும், பாதுகாப்பும் கிடைத்தது. ஏற்றுமதி இறக்குமதி வாணிகத்தில் நகர்ந்து கொண்டே வணிகம் பார்க்கும் சாத்து வணிகர்களுக்கும், அதே பண்புடைய பிற்கால ஐநூற்றுவ வளஞ்சியர்களுக்கும் எல்லா இடங்களிலும் ஒரே அளவு பாதுகாப்பு கிடைக்குமா என்றால் கிடைக்காது, எனவே தனிப் படை பாதுகாப்பு தேவைப்பட்டது. வாணிகச் சாத்தர் அயல்நாடுகளுக்கு வாணிகஞ் செய்யப் போகும்போது கூட்டமாகச் சேர்ந்து போனதுமல்லாமல் தங்களோடு படை வீரர்களையும் அழைத்துக் கொண்டு போனார்கள். வாணிகச் சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன, மருதன் இளநாகனார், பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைக் கூறுகிறார், 'மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில் செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை வல்வில் இளையர்.' வழிப்பறிக் கொள்ளயிட்ட வில் வேடரைக் கூறுகிறார். 'சாத்தெறிந்து அதர்கூட் டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர்.' (அகம், 167: 7-9) சங்க இலக்கியம் சாத்து என்றாலே படையோடு நடைபெறும் வணிகம் சென்று பொருள் கூறியது. வணிகர்க்குப் பாதுக...