சுந்தரபாண்டியன் ஆண்ட "விந்தன் கோட்டை"
தென்காசிக்கு அருகில் உள்ள இயற்கை அழகு சூழ்ந்த ஊர் சுந்தரபாண்டியபுரம். சுந்தரபாண்டியன் என்ற அரசர் இப்பகுதியை ஆண்டதால் இவ்வூருக்கு இப்பெயர் வந்தது என்று நம்பப்படுகிறது. சுந்தரபாண்டியபுரத்தில் இருந்து ஆய்க்குடி என்ற ஊருக்குச் செல்லும் பாதையில் உள்ளது ‘விந்தன் கோட்டை’ என்ற குக்கிராமம். இங்கு சுமார் ஐம்பது தலைக்கட்டுகளே உள்ளன. விந்தன் கோட்டையைச் சேர்ந்த மாடக்கண்ணு எனும் பெரியவரிடம் ‘தாத்தா ஏன் உங்கள் ஊருக்கு விந்தன் கோட்டை என்ற பெயர் வந்தது? என்று கேட்டேன், ‘தம்பி, இது சுந்தரபாண்டியன் கோட்டை கட்டி ஆண்ட பகுதியாகும். என்னோடு வாருங்கள் கோட்டை கொத்தளங்கள் இருந்த இடங்களைக் காட்டுகிறேன்’ என்றார். நான் பெரியவரின் பின்னால் சென்றேன். பெரியவர், முதலில் என்னை விந்தன் கோட்டை இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றார். இப்போது விந்தன் கோட்டை என்ற பெயரில் இருக்கும் ஊருக்கு கிழக்கே சுமார் நாலு பர்லாங் தூரத்தில் பாழடைந்த பழைய கால கோட்டை இருந்த இடம் உள்ளது. பழைய கோட்டையின் நினைவாகத்தான் இன்று அக்குக்கிராமத்திற்கு அப்பெயர் வைத்துள்ளனர். அரண்மனையைச் சுற்றிலும் நான்கு புறமும் கோட்டைச் சுவர்கள் இருந்த பகுதி இப்போ...